காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள்களாக பேசப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த காரியக் கமிட்டி கூட்டத்தில் இப்பிரச்சனை பேசுபொருளாகியது. கட்சிக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய தலைமை வேண்டும் என்று, மூத்த தலைவர்கள் 23 பேர் சேர்ந்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அக்கடிதம் சோனியா காந்தி உடல் நிலை சரியில்லாத போது எழுதப்பட்டதால், ராகுல் காந்தி கடுப்பானார். காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``பாஜகவுடன் மூத்த தலைவர்கள் ரகசியமாக உறவு வைத்துள்ளார்கள்" என்று குற்றச்சாட்டு சுமத்தினார். பின்பு அப்படி பேசவில்லை என அவர் விளக்கம் கொடுத்தது தனிக்கதை.
இதற்கிடையே, அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என கடிதம் எழுதியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கூறி வந்தனர். முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிடின் பிரசாதாவிற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்து வந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ``எதிர்பாராதவிதமாக உத்தரப் பிரதேச காங்கிரஸில் ஜிடின் பிரசாதா ஓரங்கட்டப்பட்டுள்ளார். பாஜகவுடன் தான் காங்கிரஸ் சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்ய வேண்டும். ஆனால் உட்கட்சிக்குள்ளேயே சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்வது ஆற்றல் விரயம் மட்டுமே" எனத் தெரிவித்துள்ளார்.