தமிழகத்தில் இம்மாதம் முடிவடையும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதமும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று(ஆக.29) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கலெக்டர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அடுத்தடுத்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரைப் பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் திறக்கப்படவில்லை. பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்கு இ-பாஸ் பெறும் நடைமுறையில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்தன. அதற்கான கெடுபிடிகளை நீக்கினாலும், இ-பாஸ் நடைமுறையைத் தமிழக அரசு விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கே எந்த அனுமதிச் சீட்டும் தேவையில்லை என அறிவித்து விட்டது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் அதை அமல்படுத்தாததால், மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா, கடந்த வாரம் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை கடிதமும் அனுப்பியுள்ளார்.
அதேசமயம், இ-பாஸ் ரத்து செய்யப்பட்டால் மக்களின் நடமாட்டம் அதிகமாகி, தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தமிழக அரசு கருதுகிறது. இந்நிலையில், இது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் இருந்து, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்டக் கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர்ந்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த 2 கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுமா? கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா? இ-பாஸ் ரத்தாகுமா போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.