ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி முடிகிறது. இதை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்டக் கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது :
கொரோனா பரவாமல் தடுக்கும் பணியை மாவட்டக் கலெக்டர்கள் இடைவிடாது கண்காணிக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் இலவச முகக் கவசங்கள் முறையாக வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு கட்டமாக தளர்த்தி வருகிறது. அனைத்து தொழில்களும் தொய்வில்லாமல் நடத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் தமிழகம் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. நாட்டிலேயே இந்த நேரத்திலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேவையான அளவுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.முன்களப் பணியாளர்களுக்கும், கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.இதைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.