இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை நேற்று வரை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 62,550 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நான்கு லட்சத்தை தாண்டி பாதிப்பு சென்று கொண்டிருக்கிறது. சென்னை உட்பட சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்ததாக சொல்லப்பட்டாலும், தினமும் 5,000க்கு குறையாமல் தமிழகத்தில் பாதிப்பு இருந்து கொண்டு வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவது கவலையளிக்கிறது.
இதற்கிடையே, இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 30 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 6,000ஐ தாண்டியுள்ளது. இன்று மட்டும் 6,352 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 4,15,590 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையும், 7137 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு தமிழகத்தில் உச்சமடைந்து வரும் நிலையில், அடுத்த மாதம் லாக் டவுன் நீட்டிக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.