பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், இந்த முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாய் போன்றவற்றைக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் அவர் பேசும் போது தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பதில்லை. ஆனாலும் அது பெரிய அளவில் மக்களை ஈர்ப்பதில்லை.பிரதமர் அவர் நேற்று பேசிய போது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாய் வகைகள் பற்றிக் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:உலகம் முழுவதும் பொம்மை தயாரிப்பு துறையில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி உள்ளது. அதில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாக உள்ளது. இத்தனைக்கும் நமது நாட்டில் பாரம்பரியமாகப் பல இடங்களில் பொம்மைகள் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பிரபலமானது. அதே போல், கர்நாடகாவில் உள்ள சென்னப்பட்டனா, ஆந்திராவில் உள்ள கொண்டப்பள்ளி, அசாமில் உள்ள துபாரி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய நகரங்களில், பாரம்பரியமாகப் பொம்மை தயாரிப்பு தொழில் நடைபெறுகிறது. இந்த துறையில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மட்டுமின்றி, பெரிய நிறுவனங்களும் அதிக முதலீடு செய்து இந்தியாவின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். உலக அளவில் இந்தியாவைப் பொம்மை தயாரிப்பு மண்டலமாக மாற்றுவதற்குத் தொழில்முனைவோர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பொம்மைகள் உருவாக்கும் முறை குறித்து புதிய கல்விக்கொள்கையில் பாடத்திட்டமாகச் சேர்க்கப்படும்.
சுயச்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே புதிய செயலிகளை உருவாக்குவதில் இளைஞர்கள் மிகவும் ஆர்வமாகப் பங்கேற்றனர். கடந்த மாதத்தில், இந்த சவாலில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். இந்த இளைஞர்களின் பல செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் பயன்படுத்திப் பிரபலப்படுத்த வேண்டும். ஆரம்பக் காலத்தில் சிறிய நிறுவனங்களாகத் தொடங்கப்படுபவைதான் எதிர்காலத்தில் பெரிய நிறுவனங்களாக வளர்ந்து, நாட்டின் அடையாளமாக உருவெடுக்கும்.
இளைஞர்கள், நாட்டின் பாரம்பரிய வரலாறுகளின் அடிப்படையில் கணினி விளையாட்டுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். கணினி விளையாட்டு மற்றும் பொம்மை தயாரிப்பு துறைகளில், சுயச்சார்பு இந்தியா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும், நமது பாதுகாப்பு படைகளில் தற்போது நாட்டு நாய் இனங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மக்களும் நாட்டு நாய்களை வளர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை இன நாய்கள் சிறப்பானவை. இவற்றை வளர்க்கும் போது செலவுகளும் குறைவுதான். எனவே, வெளிநாட்டு இனங்களை வாங்குவதற்குப் பதிலாக நாட்டு நாய்களை மக்கள் வளர்க்க வேண்டும். அதே போல், ஊட்டச் சத்து வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்காகச் செப்டம்பர் மாதம், ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும். நோய்த் தொற்று பரவும் காலத்தில் விவசாயிகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு காரிப் பருவத்தில் கடந்த ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகமாகப் பயிரிடப்பட்டு உள்ளது. நெல் விதைப்பில் 10 சதவிகிதமும், பருப்பு உற்பத்தியில் 5 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். தமது உரையில் ஆசிரியர்களின் பணிகளைப் பாராட்டிய பிரதமர், புதிய கல்விக் கொள்கையில் உள்ள பலன்களை மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.