கோவை, சேலம் மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு தினமும் 300ஐ தாண்டுகிறது. தற்போது சென்னை உள்பட 15 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு இன்று(ஆக.31) முடிகிறது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர் போன்ற சிலவற்றைத் தவிர மற்ற அனைத்திலும் நாளை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதத்திற்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. தற்போது கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் மீண்டும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.30) 6495 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 27 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 9238 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6406 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 62,133 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 94 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7231 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52,721 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து தினமும் 1200க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1248 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 34,436 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 419 பேருக்கும், கோவையில் 498 பேருக்கும், சேலத்தில் 326 பேருக்கும், திருவள்ளூரில் 293 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 228 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 193 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. செங்கல்பட்டில் இது வரை 25,763 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17,155 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 24,475 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, கோவை, சேலம், மதுரை, விருதுநகர், தேனி, ராணிப்பேட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்படப் பல மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.