சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனைக் காலம் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் அவர் விடுதலையாகிவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், 1,500 கோடி ரூபாய் அளவில் ஏழு பெரிய நிறுவனங்களை சசிகலா தரப்பு வாங்கியதாகவும், சொத்துகளுக்கு முறையாக ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யாமல் பணம் மட்டும் கைமாறியிருக்கிறது என்றும், வருமானவரித்துறையினர் இதுபற்றி அறிந்து, அந்த சொத்துகளின் ஆவணங்களை முடக்கியிருந்தனர் என்றும் கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது.
இந்நிலையில், போயஸ் கார்டனில் அவருக்காகக் கட்டப்பட்டு வரும் வீட்டை, தற்போது வருமான வரித்துறை முடங்கியுள்ளது. அதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிரே உள்ள 10 கிரவுண்ட் இடத்தில் இந்த வீடு கட்டப்பட்டு வந்தது. பினாமி தடுப்புப் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியாகவுள்ள நிலையில், வெளிவந்த பிறகு ஜெயலலிதா இல்லத்தின் எதிரே தங்க, அவரின் இல்லம் போலவே ஒரு இல்லத்தை போயஸ் கார்டனில் கட்டிவந்தனர் சசிகலா தரப்பினர். இப்படியான நிலையில், வருமான வரித்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்திருப்பது சசிகலாவுக்கு இன்னொரு அடியாக இது அமைந்துள்ளது.