தமிழகம் முழுவதும் ரயில், பஸ் போக்குவரத்து செப்.7ல் தொடங்கும்.. முதலமைச்சர் அறிவிப்பு..

Inter District Train, Bus service commence on sep 7th, said Edappadi palanisamy.

by எஸ். எம். கணபதி, Sep 2, 2020, 14:49 PM IST

தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே ரயில், பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது, தமிழ்நாட்டில் மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இ்ம்மாதம் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக மக்கள் சென்று வர அனுமதிக்குமாறு அரசுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. இதனால், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, செப்.7ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தற்போது செப்.7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

You'r reading தமிழகம் முழுவதும் ரயில், பஸ் போக்குவரத்து செப்.7ல் தொடங்கும்.. முதலமைச்சர் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை