கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி விடும். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். இந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் பிரமாதமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் சீசன் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் மக்களால் அதை அனுபவிக்க முடியவில்லை. கொரோனாவால் சுற்றுலாத்தலங்களில் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் குற்றாலத்திலும் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் மற்ற சுற்றுலாத் தலங்களைப் போலவே குற்றாலமும் வெறிச்சோடியது.
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் போதாவது குற்றாலத்தில் குளிக்க முடியுமா எனப் பலரும் ஏங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பும் வீணாகி விட்டது. குற்றாலத்தில் குளிப்பதற்குத் தடை தொடரும் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காகப் பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து தடை அமலில் இருக்கும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்தினருக்கும்,காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு
வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.