தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 51 ஆயிரம் பேர்..

by எஸ். எம். கணபதி, Sep 5, 2020, 09:17 AM IST

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. வழக்கம் போல் நேற்றும் புதிதாக 5976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 51,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. அதேசமயம், கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வரும் வேளையில் கொரோனா பாதிப்பு சதவிகிதம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 83,699 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இது வரை 51 லட்சத்து 30,741 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நேற்று(செப்.6) 5976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 51,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6334 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 92,507 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 79 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7687 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 51,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக இது சற்று குறைந்துள்ளது. நேற்று 992 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 39,720 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 370 பேருக்கும், கோவையில் 595பேருக்கும், கடலூரில் 499 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 260 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 154 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.செங்கல்பட்டில் இது வரை 27,654 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17,793 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 25,827 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை