திமுகவின் செயற்குழு பொதுக்குழு இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இதில் காலியாக உள்ள திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவி டிஆர் பாலுவும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களை எதிர்த்து மற்றவர்கள் யாரும் விண்ணப்பிக்கத்தால் அவர்கள் பதவிகளுக்கு வருவது உறுதியாகியுள்ளது. எனினும் இதில் சர்ச்சைகள் இருந்தது. குறிப்பாக அண்ணா போன்ற கழகத்தை தோற்றுவித்த ஜாம்பவான்கள் வகித்த பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு சமூக நீதி பேசும் திமுக இந்த முறை, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுத்து அழகு பார்க்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது. அதிலும் குறிப்பாக ஆ.ராசாவை இரண்டு பதவிகளில் ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என்றும் திமுக தலைமைக்கு தொடர்ந்து வலியுறுத்தல்கள் இருந்துவந்தது.
ஆனால், திமுக தலைமை இதனை கண்டுகொள்ளாமல் சீனியாரிட்டி அடிப்படையில் பதவிகளை கொடுக்க முன்வந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த எதிர்ப்பை சமாளிக்க, அண்ணா ஏற்படுத்திய கட்சி விதியை திருத்தும் முடிவுக்கு தற்போது திமுக தலைமை சென்றுள்ளது. அதன்படி, அதிமுகவில் எப்படி இல்லாத ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டதோ, அதேபோல் இப்போது திமுகவிலும் துணைப்பொதுச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதை ஐந்து பேருக்கு பிரித்து கொடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்ட 5 பேருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்க உள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது.