டிஒய்எப்ஐ ஆட்களுக்கு மட்டும் தான் பலாத்காரம் செய்யத் தெரியுமா? தலைவர் பேச்சால் கேரளாவில் சர்ச்சை

by Nishanth, Sep 8, 2020, 19:29 PM IST

டிஒய்எப் ஐ ஆட்களுக்கு மட்டும் தான் பலாத்காரம் செய்யத் தெரியுமா என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாக கூறி இளம்பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து சுகாதார ஆய்வாளர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரதீப் குமார் என்ற சுகாதார ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர். வீட்டுக்கு வரவழைத்து அந்த இளம்பெண்ணை கட்டிப்போட்டு வாயில் துணியை திருகி இரவு முழுவதும் அவர் பலாத்காரம் செய்ததாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சுகாதார ஆய்வாளர் விவகாரம் தற்போது கேரளாவில் அரசியல் ஆகியுள்ளது. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, இளம் பெண் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பிரதீப்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுவதில் உண்மை இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் குமார் காங்கிரஸ்காரர் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. வேண்டுமென்றே இந்த வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. டிஒய்எப்ஐ ஆட்களுக்கு மட்டும்தான் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று எங்கேயும் எழுதி வைக்கவில்லை என்றார். எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவின் கருத்து கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE ABOUT :

More India News