அரியர் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழக அரசின் முடிவு தவறானது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் வழக்குத் தொடுத்திருந்தார். நேற்று இந்த வழக்கின் விசாரணையில், மனுதாரர் தரப்பில், ``யுஜிசி விதிகளுக்கு முரணாக அரசின் உத்தரவு உள்ளது. உடனடியாக இதற்குத் தடை விதிக்க வேண்டும். அரசின் உத்தரவு தவறு என ஏ.ஐ.சி.டி.இயும் அறிவுறுத்தி உள்ளது" என்று வாதிட்டனர்.
இதன்பின் வாதிட்ட தமிழக அரசு, ``பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையிலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யுஜிசி இறுதி பருவ தேர்வைத்தான் ரத்து செய்யக்கூடாது எனக் கூறியது. இதனடிப்படையிலேயே அரசு உத்தரவு பிறப்பித்தது" எனக் கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு, ஏஐசிடிஇ, யுஜிசி செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விரிவாகப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே, இன்று அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய தொழில் நுட்ப குழுமத்திற்கு எந்த கடிதமும் அனுப்பவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் கொடுத்தார். இதற்கு அடுத்த சில மணி நேரங்களில், ஊடகங்களிடம் பேசிய, ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுதே ``அரியர் தேர்வு ரத்து செய்வது தவறான முடிவு. இதுதொடர்பாக சூரப்பாவுக்கு அனுப்பிய பதில் கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனால் என்னிடம் இருந்து தமிழக அரசுக்கோ, அல்லது தமிழக அரசிடம் இருந்து எனக்கோ தேர்வு நடத்துவது தொடர்பாக எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. அரியர் தேர்வு ரத்து குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கின் விசாரணையின் போது ஏஐசிடிஇ தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்" எனக் கூறியுள்ளார்.