வாழ்வா சாவா - சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகும் திமுக

Vazhva Sava - DMK preparing for assembly elections

முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் மறைந்த பிறகு திமுக கட்சியின் தலைவராகப் பதவியேற்று, கலைஞர் இல்லாத முதல் நாடாளுமன்றத் தேர்தலைக் களம் கண்டு பெரும் வெற்றியைத் தனது கழகத்திற்கு உரித்தாக்கி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.பக்குவமான அரசியல், உடன்பிறப்புக்களை இணைத்துக் கொண்டு வழிநடப்பது என மு.க. ஸ்டாலின் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகத் தனது தலைமைப் பண்பை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்.

UPSC தேர்வுகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சமூக நீதி தவறியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அரசியல் தலைவர்கள் மிகச் சிலரே.
இந்த சர்ச்சையைப் பிரதமரின் பார்வைக்குக் கடிதமாக எழுதி, திமுக சமூக நீதி பாதையில் இருந்து சற்றும் வழுவவில்லை என ஸ்டாலின் அவர்கள் நிரூபித்துள்ளார்.

கந்தசஷ்டி கவச சர்ச்சையின் போது திமுகவைச் சிக்க வைக்க ஏகபோக முயற்சிகள் நடந்த போது, கழகம் இது போன்ற செயல்களைக் கண்டிக்கிறது என்ற திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் அறிக்கை, திமுக வெகுசன அரசியலுக்குத் தயாராகிவிட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.திமுகவை ஆட்சியிலிருந்து மக்கள் இறக்கக் காரணமாக இருந்த 2ஜி வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாதது,தமிழக அரசியலில் காங்கிரஸ்,இடதுசாரிகள், விசிக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என அனைத்து இன மக்களையும் திராவிடம் எனும் புள்ளியில் நிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கண்டது எனத் தேர்தலில் நிற்கக் களங்கங்களைத் துடைத்து, களத்தையும் கணித்து, ஆளுங்கட்சியாக மாறத் துடித்துக் கொண்டு இருக்கிறது திமுக.

இது ஸ்டாலின் அவர்களுக்கு மிக முக்கியமான தேர்தல். தன்னுடைய ஆளுமைத் தன்மையை நிரூபிக்க இந்த களத்தைத் தவறவிட்டால், அதன் பின் வாய்ப்புகள் இருப்பது குறைவு. அதிமுகவிடமிருந்தும், பாஜகவிடமிருந்தும் கடும் நெருக்கடிகளை ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக எதிர்கொள்ள வேண்டி வரும்.கட்சியின் தலைமை பொறுப்புகளை எல்லாம் நியமித்து, தேர்தலுக்குத் தயாராகி வரும் திமுக ஒரு பக்கம் இருக்க, அக்கட்சிக்குப் பக்கபலமாக இந்தியத் தேர்தல்களின் வியூக அரசனான பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனம் , பிரச்சார வேலையை டிஜிட்டல் தளத்தில் ஆரம்பித்துவிட்டனர்.

திமுகவிற்கு IPAC சாதகமான ஒரு துணை என்றாலும், கட்சியின் கொள்கை ரீதியான விடயங்களை கார்ப்பரேட் நிறுவனமான IPAC ற்கு புரிய வைத்து, அதற்கேற்ப வியூகங்களை வகுத்தல் கட்சிக்கு வருங்காலங்களில் நன்மை பயக்கும். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களை ஆட்சியில் அமரவைக்கச் சாதிய ரீதியான வெறுப்பு அரசியலை சமூக ஊடகங்கள் வழியாகத் தூண்டியதாக IPAC நிறுவனத்தின் மீது ஆந்திர மக்கள் குற்றச்சாட்டுகளை ஏவுகிறார்கள். அது போலத் தமிழகத்தில் முகம் சுழிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துவிடாமல் இருக்க, திமுக IPAC ற்கு ஆரம்பத்திலேயே கடிவாளம் போட வேண்டிய கட்டாயம் உள்ளது. IPAC ற்கு இந்த தேர்தல் ஒரு வியாபார ஒப்பந்தம், ஆனால் தமிழக மக்களுக்கு இது எதிர்காலம்.

இப்படி 360°யிலும் விழிப்பாக இருந்து திமுக இந்த தேர்தலைக் கையாள வேண்டும். யூடியூப், சமூக ஊடகங்கள், இணையதளம் என பல்கிப் பெருகிப் போன காலத்தில் திமுக சந்திக்கும் தேர்தல் என்பதால், இது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.கருத்திலும் கருத்தியலிலும் கண்ணாக இருப்பது அவசியமாகிறது. வடக்கிலிருந்து வல்லூற்றுகள் எந்நேரமும் தாக்கக் காலம் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பது ஊரறிந்த விடயம்.

You'r reading வாழ்வா சாவா - சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகும் திமுக Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை