தமிழகத்தில் இது வரை 60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 5 லட்சத்து 20 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 8559 பேர் பலியாகி விட்டனர்.கொரோனா பரவாமல் தடுப்பதற்கான ஊரடங்கு, பெருமளவு தளர்த்தப்பட்டு விட்டது. பள்ளி கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள், நீச்சல்குளங்கள் போன்றவை மட்டுமே திறக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை மற்றும் இதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை, சேலம் போன்ற கொங்கு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தற்போதும் பரவி வருகிறது.
இதற்கிடையே, இன்று (செப்டம்பர் 17) தமிழகத்தில் புதிதாக 5,660 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,420 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 23, அரசு மருத்துவமனைகளில் 36 என மொத்த 59 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,618-ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,524-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,52,567 ஆக அதிகரித்துள்ளது.