உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் கொரோனா வைரஸில் இருந்து தங்கள் நாட்டு மக்களை காத்துகொள்ள இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்க, ஒரே ஒரு நாட்டு தலைவர் மட்டும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் 20 பெண்களுடன் ஜெர்மனியில் உல்லாசம் அனுபவித்து வருகிறார். அவர் தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலொங்கோன் என்ற ராமா எக்ஸ் தான். எல்லா நாடுகளையும் போல, தாய்லாந்திலும் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இப்படியான மோசமான சூழலில், தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலொங்கோன் என்ற ராமா எக்ஸ், 20 பெண்களுடன் ஜெர்மனியின் ஜூக்ஸ் ஸ்ப்லிட்ஸ் மலையடிவாரத்தில் உள்ள ஒரு பிரமாண்ட ஹோட்டல் ஒன்றை மொத்தமாக புக் செய்து, தனிமைப்படுத்துகிறேன் என்கிற பெயரில் கூடி கும்மாளம் அடித்து வருவதாக தாய்லாந்து மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலுக்கு மத்தியில், தாய்லாந்தில் 112 சட்டப்பிரிவை எதிர்த்து மாணவர் தலைவர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளது புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
112 பிரிவு என்றால் என்ன?!
தாய்லாந்தின் முடியாட்சி உலகின் கடுமையான அரச அவதூறுச் சட்டங்களில் ஒன்றால் பாதுகாக்கப்படுகிறது. அந்த அவதூறு சட்டத்தின் பிரிவு தான் இந்த 112 பிரிவு. இந்தப் பிரிவை வைத்து, சக்திவாய்ந்த மன்னர் மகா வஜிரலோங்க்கோர்னைப் பற்றிய எந்தவொரு விமர்சனமும் வெளியில் வராமல் பார்த்துக் கொள்கிறது தாய்லாந்து அரசு. இந்த 112 வது பிரிவின் கீழ், ராஜா, ராணி அல்லது அவர்களது வாரிசுகளை குறிவைத்து, அவதூறு செய்தாலோ, அவதிமதித்தாலோ, அவர்களுக்கு மூன்று முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க முடியும்.
விமர்சனங்களை நேரடியாக அல்லது சமூக ஊடகங்களில் மூலம் பேசப்படும் விமர்சனங்களுக்கும் தண்டனை நிச்சயம் என்கிறது இச்சட்டம். 2017 ஆம் ஆண்டில், தொடர்ச்சியான பேஸ்புக் பதிவுகள் மற்றும் அரச குடும்பத்தைப் பற்றிய கருத்துக்களுக்காக ஒரு நபருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்தின் கீழ் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம், கைது செய்யலாம். அப்படி கைது செய்யப்படுபவர்கள் மீதான விசாரணையும் எந்த வித வெளிப்படைதன்மையும் இன்றி நடைபெறும்.
2014 க்கு முன்னர் ஆறு பேர் மட்டுமே இச்சட்டத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால், 2014ல் ராயலிச இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பிலிருந்து இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2014க்கு பின்னர் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் குற்றவாளிகளாகவே அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வேளை அவர்களே முன்வந்து அரசுக்கு சிரமம் வைக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனைகள் பெரும்பாலும் பாதியாக குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ராணுவ ஆட்சிக்குழு ஆர்வலர், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் இச்சட்டத்தால் விபரீதங்களை சந்தித்துள்ளனர். இவர்கள் கூட ஆட்சியை பற்றி குறை கூறியதற்காக சிறைவாசத்தை சந்தித்திருக்கிறார்கள். ஆனால் ஒருவர், தாய்லாந்து மன்னருக்கு பிடித்த நாய் குறித்து கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக சிறை சென்ற சோகம் நேர்ந்துள்ளது என்பது இதைவிட ஒரு பெரிய கொடுமை. இதனை எதிர்த்து தான் தற்போது மாணவர் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த சட்டப்பிரிவை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒன்று கூடி வருகின்றனர். ஆனால் இது ஜெர்மனியில் உல்லாசம் அனுபவிக்கும் மன்னருக்கு கேட்குமா?