அதிமுகவில் கிளைமாக்ஸ்.. வெல்லப் போவது யார்? செப்.28ல் பைனல் ஆரம்பம்..

C.M. candidate issue comes to climax in Admk.

by எஸ். எம். கணபதி, Sep 19, 2020, 15:34 PM IST

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், கிளைமாக்ஸ் காட்சியை எட்டியுள்ளது. செயற்குழுவில் இரு அணிகளுக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்படுத்த அமைச்சர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று 2 ஆக அதிமுக உடைந்தது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இதன்பின், ஒரு சமரச உடன்பாட்டில் இரு அணிகளும் இணைந்தன. அதன்படி, கட்சிக்குத் தலைமையாக ஓ.பி.எஸ், ஆட்சிக்குத் தலைமையாக இ.பி.எஸ். என்று முடிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் ஒன்று சேர்ந்தே அனைத்து முடிவுகளையும் மேற்கொண்டனர்.சில மாதங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலும், ஆட்சியிலும் கோலோச்சத் தொடங்கினார். ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை ஓரங்கட்டினார். இதனால், கட்சிக்குள் கசமுசா ஏற்பட்டாலும் இருதரப்பிலும் ஆட்சி அதிகாரத்தின் மீதுள்ள பற்றினால் அமைதியாக இருந்தனர். தற்போது ஆட்சி முடியும் தருவாயில் இருதரப்பிலும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி சமீபத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், முதல்வரைப் பாராட்டி கவிதை எழுதியிருந்தார். அதில் காலமெல்லாம் நீயே நிரந்தர முதல்வராகி என்று எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டார். அடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, முதல்வரைத் தேர்ந்தெடுப்போம். கடந்த காலங்களில் அப்படித்தான் தேர்வு செய்தோம் என்று பதிலளித்தார். அதாவது, மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக வருவார் என்பதை மறுக்கும் வகையில் பேட்டியளித்தார்.இதற்குப் பிறகு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு ட்விட் போட்டார். அதில், எடப்பாடியார் என்றும் முதல்வர். அவர் தலைமையில்தான் தேர்தல் களம் காண்போம் என்று கூறியிருந்தார். மேலும், அதை ஓங்கியடித்துச் சொல்லும் வகையில் பேட்டியும் கொடுத்தார். அடுத்த நாள், அதையே அமைச்சர் உதயகுமாரும் சொன்னார்.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தி அடைந்தார். இது கடந்த ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியது. முக்கிய அமைச்சர்கள் கூட்டமாக முதல்வர் வீட்டுக்கும், துணை முதல்வர் வீட்டுக்குமாக மாறி, மாறிச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 5 மணி நேர ஆலோசனைக்குப் பிறகும் அமைச்சர்கள் யாரும் பத்திரிகையாளர்களிடம் வாய் திறக்கவில்லை. முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாகச் சந்தித்துப் பேச முடியாத அளவுக்கு மோதல் ஏற்பட்டிருப்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிந்தது. கடைசியில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதில் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சியினர் யாரும் வாய் திறக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இருவரும் சேர்ந்தே கட்சிக்காரர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டாலும் அதற்குப் பின்பும் மோதல் தொடர்கிறது.

அமைச்சர் கருப்பணன் கடந்த செப்.8ம் தேதியன்று அளித்த பேட்டியில் அடுத்த தேர்தலிலும் எடப்பாடியே முதல்வராகத் தொடர்வார் என்று கூறி, மீண்டும் பிரச்சனையைக் கிளறி விட்டார். இதற்குப் பிறகு, ஓ.பி.எஸ். சொந்த மாவட்டமான தேனியில் அதிமுகவினர் சிலர் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதில், மீண்டும் எடப்பாடி; வேண்டும் எடப்பாடி என்று கூறப்பட்டது. அதாவது ஓ.பி.எஸ். சொந்த மாவட்டமான தேனியிலேயே எடப்பாடி ஆதரவாளர்கள் இருப்பது உறுதியானது.இது பற்றி அதிமுகவினர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்சை பிடிக்காத அதிமுகவினர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் மறைமுகமாக எடப்பாடி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் எடப்பாடியார் பேரவை என்று தொடங்கி, ஆள் சேர்த்து வருகிறார்கள். ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் யாருக்குமே அவரால் பெரிய பலன் கிடைக்கவில்லை. மேலும், அவரது ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்து அவரை செல்லாக்காசாக்க எடப்பாடி மறைமுகமாகக் காய் நகர்த்தி வருகிறார் என்றனர்.

இந்த சூழ்நிலையில்தான், செப்.18ல் அதிமுக உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எடப்பாடி வரும் போது, நிரந்தர முதல்வர் எடப்பாடி என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். ஓ.பி.எஸ். வரும் போது, அம்மாவின் அரசியல் வாரிசு ஓ.பி.எஸ் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படவில்லை.இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தேர்தல் பணிக்காக இப்போதே துணை முதல்வர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளதாக ஓ.பி.எஸ். கூறினார். அதே போல், மற்ற அமைச்சர்களையும் பதவி விலகச் சொன்னார். ஆனால், அதை யாரும் ஏற்கவில்லை. கட்சிக்குத் தானே தலைமை வகிப்பேன் என்ற ரீதியில் ஓ.பி.எஸ் பேசினார். அதனால், 28ம் தேதி செயற்குழுவிலும் மோதல் ஏற்படவே வாய்ப்பு உள்ளது. மோதலை தடுப்பதற்காக முன்கூட்டியே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையே சமரச உடன்பாடு காண முக்கிய அமைச்சர்கள் முயற்சித்து வருகின்றனர். இதில் சமரசம் ஏற்படாவிட்டால், பிரச்சனையை மேலும் சில மாதங்களுக்குத் தள்ளிப் போட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். எப்படியோ, தேர்தலுக்குள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோரில் ஒருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே கட்சி உடைவது தடுக்கப்படும் என்பது மட்டும் உறுதி.

You'r reading அதிமுகவில் கிளைமாக்ஸ்.. வெல்லப் போவது யார்? செப்.28ல் பைனல் ஆரம்பம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை