ஆலங்குடி அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கிறது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக, ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அங்குள்ள லெனின் சிலைகளை அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இதற்கு, நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது பேஸ்புக் கணக்கில், “இன்று திரிபுராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என குறிப்பிட்டார். இதற்கு, தமிழ்நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சி தலைவர்களும் ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து, எச்.ராஜா தனது கருத்தை நீக்கினார். பல்வேறு இடங்களில் அம்பேத்கர், பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டன. சிலை அரசியலை நிறுத்துமாறு இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு பெரியாரின் சிலை ஒன்று நிறுவப்பட்டு இருந்தது. மேலும், அப்பகுதியில் முக்கிய அடையாளமாக அந்தச் சிலை இருந்தது.
இதற்கிடையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். தலை துண்டித்த நிலையில் காணப்பட்ட பெரியார் சிலையால், இன்று அதிகாலை முதலே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.