மரம்... பூமியின் நுரையீரல் - நமது பாரம்பரியம் பகுதி 5

Advertisement

ஒரு பழைய பாடல் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்,

மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு கிளை பாரமா?
கிளைக்கு காய் பாரமா?

உண்மையில் மனிதன்தான் மரத்துக்கு பாரம், இல்லையென்றால் 'முன்னேற்றம்' என்ற போர்வையில் இப்படி லட்சக்கணக்கில் காடுகளை அழிப்போமா?

எப்படி 'புகைப்பிடித்தல்' நுரையீரலுக்கு கேடு என்று தெரிந்தும் புகைப்பிடிப்பவர்கள் திருந்துவது இல்லையோ, அது போலவே பூமியின் நுரையீரலான மரங்களுக்கும் கேடு விளைவித்து 'முன்னேற்ற போதை' யில் முன்னேறுகிறது உலகம். விளைவு? நிச்சயம் அழிவுதான்.

எங்கோ படித்த ஞாபகம்,
'பூமியின் பாதிக்கு மேற்பட்ட ஆக்சிஜன் தேவையை அமேசான் காட்டு மரங்களே தீர்த்து வைக்கின்றன' என்று.

என்ன ஆச்சரியம்! நாம் வேண்டாம் என்று வெளியிடும் கரியமில வாயுவை கிரகித்துக் கொண்டு நமக்கு தேவையான பிராண வாயுவை வெளியடும் மரங்கள், உண்மையில் தெய்வங்களுக்கு சமம் இல்லையா? எனவேதான் ஆதி தமிழன் மரங்களை தெய்வத்துக்கு நிகராக்கி வழிபட்டான்,

அரசமரத்தடி பிள்ளையார்
வேப்ப மர மாரியம்மன்
சிவன் கோவில் வில்வ மரம்
புத்தாண்டிற்கு மாவிலை

என அவர்கள் வழிபட்ட முறைகள் எல்லாம் ஏதோ மேம்போக்கான நடைமுறைகளில்லை ஆழ்ந்து சிந்தித்த நுண்ணறிவு நிறைந்த கோட்பாடுகள்.

ஒவ்வொரு கோவிலுக்கும் ஸ்தல விருட்சம் என்று ஒன்றை வழிபட்டார்கள். ஒவ்வொரு ராசி நட்சத்திரத்திற்கும் ஒரு மரத்தை நட்டு கும்பிட்டார்கள். அவை வெறும் மூடப் பழக்கங்களில்லை அவ்வாறு மனிதன் மரத்தைப் போற்றி வளர்த்தால்தான் இந்த பூமியே செழிக்கும் என்பது அவர்களது பாரம்பரிய நம்பிக்கை.

மரத்தால் என்ன பயன்?

ஒரு மரம் சூரிய ஒளி நேராக பூமியில் விழுவதை தடுக்கிறது எனவே அதன் நிழலில் சகல நுண்ணுயிர்களும் சுகமாக வாழ்கின்றன. மழை நீர் நேரடியாக மண்ணில் பாய்ந்து மண் அரிப்பு ஏற்படாமல் மரக் குடை தடுக்கிறது எனவே மண் வளர்கிறது. மரத்தின் வேரும் அவ்வாறு மண் பெயர்ந்து போகாமல் இறுக்கி வைக்கின்றது. மரத்தின் கிளைகளில் ஆயிரக்கணக்கான விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. அவை மரத்தின் காய் கனிகளை தின்று வேறு இடங்களுக்கு சென்று எச்சமிடும்போது அந்த விதைகள் பரவி காடு வளர்கிறது. மரங்கள் வெளியிடும் ஈரப்பதக் காற்றால் சூழல் குளிர்ந்து மழை உருவாகிறது. இவையெல்லாம் மரத்தை நாம் துன்புறுத்தாமல் இருந்தாலே நமக்கு கிடைக்கும் பலன்கள்.

இதில் நான் பிராண வாயுவையும், carbon sink என்ற வகையில் மரங்கள் ஆற்றும் பணியையும் சேர்க்கவில்லை. இதை தவிர்த்து மரத்தைத் துன்புறுத்தி மனிதன் பெறும் பொருட்களுக்கு - காய் கனி தவிர்த்து - நார்ப்பொருட்கள், எரிபொருட்கள், வாசனைப் பொருட்கள், மற்றும் இதர மரச்சாமான்கள் கணக்கற்றவை. முக்கியமாக மருந்து பொருட்களை எடுத்துக் கொண்டால் தொண்ணூறு சதவீதம் எல்லாம் காட்டிலிருந்து கிடைக்கும் மூலிகைகளே ஆகும்.

எனவேதான் அந்தக்கால ரிஷி முனிகள் காட்டில் வாழ்ந்து, தமது எல்லா தேவைகளையும் காட்டு மரங்களை அழிக்காமல் பூர்த்தி செய்து கொண்டனர். 'Sacred groves' என்று தெய்வ வனங்களை தோற்றுவித்தனர்.

காட்டில் வளரும் மரங்கள் தவிர்த்து, நாட்டு நன்மைக்கும் பல மரங்களை தனது பண்பாடு சார்ந்து தமிழன் போற்றி வந்தான். தென்னை, மா, பலா, வாழை, தேக்கு, கமுகு (பாக்கு) என , பழைய செய்யுள்களை புரட்டி பார்த்தால், தேனும் பாலும் கலந்து ஓடிய திருநாடாக இருந்தது நமது தமிழகம். குறிப்பாக பனைமரம், தமிழர் பண்பாட்டின் இலட்சினை என்றால் மிகையில்லை. தமிழ் நாட்டின் 'மாநில மரமாக' அது இருப்பதில் சந்தோஷம் தான் ஆனால் அது ஏட்டளவில் மட்டுமே இருந்து விடக்கூடாது.

பனையில் என்னவெல்லாம் பயன்?

பனையில் எல்லாமே பயன்! சிறு வயதில் பனநுங்குகளை சுவைக்காதவர்களே இருக்க முடியாது. பனங்கிழங்கு, பனங்கற்கண்டு (அவ்வளவும் மருத்துவக் குணம்) தவிர பனை ஓலை, பனைமரத் தண்டு என பனை ஒரு கற்பக விருட்சம்தான்.

தமிழனின் எழுத்தோட்டமே பனை ஓலையிலிருந்துதானே ஆரம்பமாயிற்று. அவை இல்லையெனில் திருக்குறள், தேவாரம், திருவாசகம், என்கிற அரிய பொக்கிஷங்கள் நமக்கு கிடைத்திருக்குமா? ஆனால் இன்று, பனைமரங்களை நாம் ஊர்ப்புறங்களில் காண முடிகிறதா? ஏதோ சில அரசியல் மற்றும் வணிகக் காரணங்களுக்காக பனங்கள்ளை காரணம் காட்டி, பனையை அடியோடு மறந்து விட்டோம். தென்னையின் 'நீரா' என்கிற பதநீர் உயிர் பெறுவது போல பனையின் நீராகாரங்களும் உயிர் பெற வேண்டும்.

உலோகமும் பிளாஸ்டிக்கும் உபயோகத்தில் வந்திராத அந்தக் காலத்தில் மரத்தையும் மண்ணையும் கொண்டுதான் பலவித்தைகளை செய்து முடித்தான் தமிழன். திரை கடல் ஓடி திசை யெட்டும் வென்ற சோழர் பரம்பரையின் திறமையான கப்பல் படை, அதி உன்னத தச்சு வேலைத் திறமையின்றி சாத்தியமாகி இருக்க முடியுமா? அல்லது ஆயிரம் கிலோவிற்கு மேற்பட்ட ஒரு கல்லை பெரிய கோவிலின் உச்சத்திற்கு யானைகளைக் கொண்டு சாரம் கட்டி ஏற்றிய அவர்களின் 'Engineering Wisdom' வேறு எவருக்கேனும் சளைத்ததுதானா!.

அவர்கள் ஒவ்வொரு மரத்தின் உள் கட்டமைப்பையும் நன்கு தெரிந்து, எந்த மரம் எதற்கு பயன்படும் என்று அறிந்து வைத்திருந்தே இதற்கு காரணம். தவிர, மருத்துவத்திலும் பல்வேறு கஷாயங்களையும், காட்டு மூலிகைகளையும் திறம்பட அவர்கள் பயன்படுத்தி வந்தது, இன்றும் பழைய கோவில் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.

எனவே திரு.வைரமுத்து அவர்கள் சொன்னது போல்,

மரந்தான் மரந்தான்
எல்லாம் மரந்தான்
மறந்தான் மறந்தான்
மனிதன் மறந்தான்.

இனியேனும் மரத்தை மனதில் வைத்து மானுடம் போற்றுவோம்.

- தொடரும் ................ - முனைவர் நா.லோகானந்தன்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்,

உழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை... நமது பாரம்பரியம்! - பகுதி 1

உணவே மருந்து... நமது பாரம்பரியம்! - பகுதி 2

“மண் பயனுற வேண்டும்” - நமது பாரம்பரியம் பகுதி - 3

“கேடில் விழுச்செல்வம்...” மாடு! - நமது பாரம்பரியம் பகுதி - 4

நீரின்றி அமையாது உலகு... நமது பாரம்பரியம் - பாகம் 6

பகுத்துண்டு பல்லுயிர் போற்றல்... நமது பாரம்பரியம் - பாகம் 7

இந்தக் கட்டுரையின் ஆசிரியர், முனைவர் நா.லோகானந்தன் கர்நாடக மாநிலத்தின் தும்கூரிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவராகப் பணியாற்றி வருபவர். “இயற்கை வேளாண்மையின் சமுதாய மற்றும் சூழலியல் சார்ந்த தாக்கம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர். மக்களின் நலனிலும் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை கொள்பவர். இவர், நமது பாரம்பரியத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தொடர்ந்து எழுதிவருகிறார். படித்து நாம் பயன்பெறுவோம்.

Advertisement

READ MORE ABOUT :

/body>