பகுத்துண்டு பல்லுயிர் போற்றல்... நமது பாரம்பரியம் - பாகம் 7

அன்று நண்பர் ஒருவர் புது மனை புகு விழா செல்ல நேர்ந்தது. அழகான வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் ஆர்வமாய் விளக்கினார் நண்பர் இது 'இட்டாலியன் மார்பிள்' இது 'பெல்ஜியம் glass' என்று. சிந்தனை வேறு திசை நோக்கி பயணித்தது.

எல்லாவற்றிலும் வெளியிலிருந்து வந்தால்தான் உசத்தி என்று பழகிவிட்டோம். இந்தியில் கூட ஒரு சொல்வடை உண்டு 'கர் கா முருகி தால் பராபர்' அதாவது நமது வீட்டுக் கோழிக்குழம்பு என்றால் அது பருப்பு துவையலுக்கு சமானமென்று. பழைய எம்ஜிஆர் பாடல் நினைவுக்கு வருகிறது,

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஒழுங்கா பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்'

உண்மை ஆனால் இந்த உண்மைக்கு இன்று மதிப்பில்லை தான். கட்டுரையின் முன் பகுதியில் பார்த்தது போல நம்ம ஊரும் பலவற்றில் சிறந்தது தான். திண்டுக்கல் பூட்டும், சிவகாசிப் பட்டாசும் நாடறியும் பெருமைதான். ஆனால் அது மட்டுமா? இன்னொரு சிவாஜி பாட்டு ஞாபகம் வருகிறது.

மணப்பாறை மாடு கட்டு
மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்ன கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி வெத வெதச்சு
கருத நல்லா வெளய வெச்சு
மருத ஜில்லா ஆள வெச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்ன கண்ணு
பொதிய ஏத்தி வண்டியில்
பொள்ளாச்சி சந்தையில
விருது நகர் வியாபாரிக்கு சின்ன கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்ல கண்ணு

மணப்பாறை மாடு, மாயவரம் ஏரு, ஆத்தூரு சம்பா, மருத ஜில்லா ஆளு, பொள்ளாச்சி சந்தை, விருது நகர் வியாபாரி ஒரே பாட்டில் எவ்வளவு ஊர்ப் பெருமை!

அன்று தமிழர் வாழ்வும் அப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு இருந்தது போல, அவனது வீடும், காடும் பல்லுயிர் விருட்சமாக இருந்தது. பயிர்களில் கூட தானியம், பருப்பு, எண்ணெய் வித்துக்கள், நறுமணப் பயிர்கள், காய்கறிகள், பழங்கள், நெசவு பயிர்கள் என கலந்து கட்டி பயிர் செய்தான். ஒரு பயிரின் எச்சம் மறு பயிருக்கு எருவானது. இன்று நாம் பேசும்' Nitrogen fixing of legumes' அன்று அவனது பால பாடம். அதை விளக்கிச் சொல்ல அவனுக்கு தெரியாமல் இருந்தாலும், அனுபவ ஞானம் அபாரம்.

வீட்டிலும் தோட்டத்திலும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, வாத்து, தேனி, குருவி, காகம், என பலவித கூட்டுப் பண்ணை வாழ்வு வாழ்ந்தான். தனக்கு மிஞ்சியவற்றை அவற்றுக்கும் பகுத்துண்டு வாழ்ந்தான். அதனால்தான்,

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை'
என்றார் வள்ளுவர்.

அன்று அவனுக்கு தெரிந்திருக்கிறது மனிதன் தனித்தவன் இல்லை. அவன் இந்த இயற்கைச் சங்கிலியின் ஒரு வளையம். அவனது ஆசை இயற்கையை வெல்வதல்ல, இயற்கையோடு இசைந்து வாழ்தல் . தன்னைப் போலவே எல்லா ஜீவராசிகளும் இந்த இயற்கை எனும் மகாசக்தியின் ஒரு அங்கம். அவை அப்படி அப்படியே அவற்றிற்கான பணியை செய்யும் போது தான் நாம் நாமாக இருக்க முடியும். அந்த சங்கிலியின் ஒரு வளையம் அறுந்தாலும், மொத்த இயக்கமுமே நின்று விடும் என்று அவன் அறிந்திருந்தான். அதனால்தான் அவனது விவசாய முறை இயற்கையை பிரதிபலித்தது, எப்போதும் இடைமறிக்கவில்லை.

Monoculture என்று நாம் அறிவியலைக் கொண்டு கண்டறிந்த கோட்பாடுகளெல்லாம் முற்றிலும் தவறு என்ற தீர்மானத்திற்கு இன்று வேளாண் மூதறிஞர்களே வந்துவிட்டனர். அதனை முன்கூட்டியே கண்டுணர்ந்தவன்தான் ஆதி தமிழன்.

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்"
என்றார் கண்ணதாசன். அது தான் சீரிய நோக்கம். அது ஒன்று தான் அன்று அவனது பாரம்பரியம்.
அதனால்தான் விருந்தோம்பலும் ஆகச் சிறந்த பண்பாக அன்று போற்றப்பட்டது. விருந்தினரை கடவுளுக்கு சமமாக மதிப்பளித்து மகிழ்ந்தனர்.

'வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்?'
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கிறவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ? என்று புகழப்பட்டனர், விருந்தினரை நன்கு உபசரித்து உணவளித்தவர்கள். ஆனால் இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு இவையெல்லாம் நகைப்புக்குரிய விசயங்கள் தவிர வேறென்ன?

இருந்தாலும், விருந்தோம்பல் என்பது வெறும் உணவு உபசரிப்பு மாத்திரமில்லை. நம்மிடம் இருக்கும் அறிவையும், ஆற்றலையும் கூட மற்றவர் நன்மைக்கு நாம் விருந்தளிக்கலாம். அந்த வகையில் ஏதோ எனக்கு தெரிந்த சில தமிழர் பாரம்பரியம் குறித்த விசயங்களை இத்தனை காலம் உங்களோடு பகிர்ந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொரு விசய ஞானத்தோடு மீண்டும் நாம் சந்திக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது நா.லோகானந்தன்.

- முற்றும்.

..............

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்,

உழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை... நமது பாரம்பரியம்! - பகுதி 1

உணவே மருந்து... நமது பாரம்பரியம்! - பகுதி 2

“மண் பயனுற வேண்டும்” - நமது பாரம்பரியம் பகுதி - 3

“கேடில் விழுச்செல்வம்...” மாடு! - நமது பாரம்பரியம் பகுதி - 4

மரம்... பூமியின் நுரையீரல் - நமது பாரம்பரியம் பகுதி 5

நீரின்றி அமையாது உலகு... நமது பாரம்பரியம் - பாகம் 6

இந்தக் கட்டுரையின் ஆசிரியர், முனைவர் நா.லோகானந்தன் கர்நாடக மாநிலத்தின் தும்கூரிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவராகப் பணியாற்றி வருபவர். “இயற்கை வேளாண்மையின் சமுதாய மற்றும் சூழலியல் சார்ந்த தாக்கம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர். மக்களின் நலனிலும் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை கொள்பவர். இவர், நமது பாரம்பரியத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தொடர்ந்து கூறிவருபவர்.

Advertisement

READ MORE ABOUT :