ஆடி முதல் தேதி... தேங்காய் சுடும் திருவிழா கோலாகலம்!

சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகலம்!

Jul 17, 2018, 23:46 PM IST

ஆடி மாதம் பிறந்ததையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Coconut festival

மகாபாரதப்போர் ஆடி மாதம் 1-ஆம் நாள் தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது, எனும் அடிப்படையில் ஆடி பிறப்பன்று இந்நிகழ்வு கொண்டாடப்படுவதாக மக்கள் நம்புகின்றனர்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் தேங்காய் சுடும் திருவிழா ஆடி மாதம் முதல்தேதி நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

அதன்படி, தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் ஒரு கண்ணில் துளையிட்டு, அதில் உள்ள நீரில் பெரும்பகுதியை வெளியேற்றிய பின், தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை நிரப்பி, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் அந்த தேங்காயை சொருகுவர். பின்னர், அந்த குச்சிக்கும் தேங்காய்க்கும் மஞ்சள் பூசுவர். பின்னர், வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி கூடி நின்று தேங்காயை சுடுவார்கள்.

தேங்காய் ஓட்டின் ஒரு பகுயில் வெடிப்பு விழும், அந்த பக்குவத்தில் சுடுவதை நிறுத்தி, அதை அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கோ அல்லது குல தெய்வம் கோயிலுக்கோ எடுத்துச்சென்று வழிபடுவர். அதன் பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து அதை உடைத்து உள்ளே இருக்கும் அவல் கலவையை உறவினர்களுடன் கூடி உண்டு மகிழ்வர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிபாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தேங்காய் சுடும் பண்டிகையை சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட அனைவரும் உற்சாகத்துடன் வீடுகள் தோறும் கொண்டாடினர்.

You'r reading ஆடி முதல் தேதி... தேங்காய் சுடும் திருவிழா கோலாகலம்! Originally posted on The Subeditor Tamil

More Namathu parambariyam News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை