நீரின்றி அமையாது உலகு... நமது பாரம்பரியம் - பாகம் 6

Advertisement

நீர்

இந்த ஒற்றைச் சொல், வெறும் சொல்லல்ல. இந்த மண்ணில் எந்த ஜீவராசியும் உயிர் வாழ வேண்டுமென்றால் காற்றுக்கு அடுத்து முக்கியம் வாய்ந்து இந்த நீர்தான்.

எனவேதான் வான் புகழ் வள்ளுவர்,

'நீரின்றி அமையாது உலகு'
என்றார்.

அந்த நீர் மேலாண்மையில் பண்டைய தமிழர் பாரம்பரியம் பரந்து பட்டது.

கரிகாலனின் கல்லணை ஒன்று போதுமே - ஒரு சோறு பதம்.

நாகரீக உலகின் எத்தனையோ அணைகள் தாக்குப் பிடிக்காத நிலையில், ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாய் நிற்கிறது நமது கல்லணை.

கல்லணை மட்டுமா?

கிணற்றுப் பாசனம், ஏரிப் பாசனம், குளத்துப் பாசனம், வாய்க்கால் பாசனம் என்று தமிழனின் நீர் மேம்பாட்டு அறிவு சிறந்துபட்ட காலம் அது.

செங்கல்பட்டு மாவட்டத்தை 'ஏரி மாவட்டம்' என்று பள்ளி நாட்களில் படித்த ஞாபகம் உங்களுக்கு இருக்கும். இன்று அந்த ஏரிகள் எந்த நிலையில் உள்ளன என்பது கேள்விக்குறியாக இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்தில் அவைகள் வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்ட விதம், தமிழனின் அறிவுக்கு மிகச்சிறந்த சான்று.

இன்று Watershed management என்று எல்லோரும் பின்பற்றும் Ridge to Valley தத்துவத்தில் அன்றே சிறந்து விளங்கியவர்கள் நமது முன்னோர்.

அதாவது, நிலப்பரப்பின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, மேட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஏரிகள் மழைக்காலத்தில் நிரம்பினால், அதிகபட்ச நீர் வழிந்து வாய்க்காலில் ஓடி தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகளை நிரப்பி, பின் அவற்றில் மிகும் உபரி நீர் மேலும் கீழ் நிலை ஏரிகளை நிரப்பும் உன்னத அறிவியல் அவர்களது சொத்து.

ஒவ்வொரு ஊர்க் கண்மாய்க்கும், ஏரிக்கும் மராமத்துப்பணி செய்வதற்கென்றே தனிக்குழு அமைத்து, தூர்வாருவதும், செப்பனிடுவதும் என்று செயல் புரிந்து சிறப்புச் சேர்த்தவர்கள் நமது தமிழர்கள். அன்று அவர்களுக்கு தெரிந்திருந்தது ஒவ்வொரு ஊரின் நீர்த் தேவையும் அந்தந்த ஊரில் விழும் மழைநீரைக் கொண்டே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று.

கல்லணையும் காவிரியும் வாரி வழங்கினாலும், வானம் வழங்கியதை எந்நாளும் அவர்கள் உதாசீனப்படுத்தியதில்லை. ஏனெனில் காவிரி பொய்த்தாலும், கார் முகில் பொய்க்காது என்பது அவர்களது நம்பிக்கை. அதே சமயத்தில் காவிரியையும் தாயாகவே எண்ணி போற்றியவர்களும் அதே தமிழர்கள்தான்.

“காவிரி தென்பெண்ணை பாலாறு
தமிழ் கண்டதோர் வைகை பொறுணை நதி”
என்றார் பாரதி.

காவிரி மட்டுமல்லாமல் எல்லா நதிகளும் வற்றாத ஜீவநதிகளாய் ஓடி, தமிழர் வாழ்வில் வளம் சேர்த்தன.

கால்நடைக்கும், கதிரவனுக்கும் பொங்கல் விழா எடுத்தது போல், நீருக்கும் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் நமது முன்னோர்கள். சில வருடங்களுக்கு முன் கூட ஆடிப்பெருக்கு அன்று குடும்பம் குடும்பமாக எல்லோரும் ஆற்றங்கரைக்குச் சென்று, வழிபடுவதும், கேளிக்கைகளில் பங்கு பெறுவதுமாய் இருந்தவர்கள்தான் நாம்.

ஆனால் இன்று ஆற்றில் நீருமில்லை கூடும் மனதில் மகிழ்ச்சியுமில்லை. எல்லா பெரிய பண்டிகைகள் போல, ஆடிப்பெருக்கும் தொலைக்காட்சி முன்பு தொலைந்து போகிறது.

நீரை நாம் எங்கெங்கு காணினும் அதற்கெல்லாம் மூல காரணம் 'மழை'. இதை நன்கு அறிந்துதான் வள்ளுவர் கூட வான்சிறப்பு என்று தனி அதிகாரமே எழுதினார். அதுவும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து இரண்டாவது அதிகாரமாக, அதாவது கடவுளுக்கு அடுத்த இடத்தில் மழையை வைத்தார்.

தனது விவசாயத்திற்கு முக்கியமான நீரை வழங்குவது ஆறு, குளம், குட்டை என்று பல இருந்தாலும், மழைதான் அவற்றிற்கு மூல காரணம் என்பதை ஆதி தமிழர் நன்கு அறிந்திருந்தனர்.

அதனால்தான் மழை மற்றும் வானிலை குறித்து அவர்களது ஆளுமை மிகத்துல்லியமாக இருந்தது. அது இந்த காலத்து 'Indian meteorological department forecasting' க்கு எந்த விதத்திலும் சளைத்தில்லை.

இன்றளவும் கர்நாடக கிராமங்களில் பரணி மழை, கார்த்திகை மழை என்று நட்சத்திரங்களோடு தொடர்பு படுத்தியும், தமிழக கிராமங்களில் ஆடிக்காத்து, பங்குனி வெயில் என்று மாதங்களை தொடர்பு படுத்தியும் விவசாயிகள் பேசிக் கொள்வது பல நூற்றாண்டு கடந்து வரும் பாரம்பரியம்.

வெறும் காற்றின் ஈரப்பதத்தை உணர்ந்து மழை எப்போது வரும் என்றும், மேகங்களின் ஓட்டத்தையும், பூச்சி பறவைகளின் இயக்கத்தையும் கண்டு மழை எப்படி இருக்கும் என்றும் கணித்தவர்கள் நம் முன்னோர்கள்.

ஏன் இன்றும் கூட பறவைகளும் விலங்குகளும் இயற்கை நிகழ்வுகளை முன் கூட்டியே அறிந்து விடுகின்றன. மனிதன் மட்டும்தான் அந்த அறிவை இழந்துவிட்டான். காரணம் இயற்கையிலிருந்து வெகு தூரம் விலகி வந்துவிட்டதே. மழை மட்டும்தான் இயற்கையோடு மனிதனை இணைக்கும் பந்தத்தில் முதலாவதாக நிற்கிறது. அந்த மழை தரும் நீரை முன் கூட்டியே அனுமானிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, வந்த நீரை வீணாக்காமல் இருந்தாலே அது பெரும் சேவை.

- தொடரும் ................ - முனைவர் நா.லோகானந்தன்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்,

உழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை... நமது பாரம்பரியம்! - பகுதி 1

பாரம்பரியம் என்பதற்கு சரியான அர்த்தம் என்னவென்று பார்த்தால் நமது நம்பிக்கைகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் வழிவழியாய் வாங்கி வழங்குவது என்று பொருள்கொள்ளலாம். https://tamil.thesubeditor.com/news/namathu-parambariyam/1574-save-our-tradition.html

உணவே மருந்து... நமது பாரம்பரியம்! - பகுதி 2

நீர் மட்டுமல்ல மற்ற விலை மிகுந்த இடு பொருட்களான கடை உரங்களோ, பூச்சிக் கொல்லிகளோ கூட இவற்றிற்கு தேவையில்லை. எனவே, இந்தக் காலத்து மொழியில் சொல்வதென்றால், They are organic by default இதனால் மண்வளமும் பாதுகாக்கப்படுகின்றது. விவசாயிக்கும் செலவு குறைகிறது. சாப்பிடும் மக்களுக்கும் ஆரோக்கியம் மிகுகிறது. https://tamil.thesubeditor.com/news/namathu-parambariyam/1719-save-our-tradition-part-2.html

“மண் பயனுற வேண்டும்” - நமது பாரம்பரியம் பகுதி - 3

“கேடில் விழுச்செல்வம்...” மாடு! - நமது பாரம்பரியம் பகுதி - 4

மரம்... பூமியின் நுரையீரல் - நமது பாரம்பரியம் பகுதி 5

பகுத்துண்டு பல்லுயிர் போற்றல்... நமது பாரம்பரியம் - பாகம் 7

இந்தக் கட்டுரையின் ஆசிரியர், முனைவர் நா.லோகானந்தன் கர்நாடக மாநிலத்தின் தும்கூரிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவராகப் பணியாற்றி வருபவர். “இயற்கை வேளாண்மையின் சமுதாய மற்றும் சூழலியல் சார்ந்த தாக்கம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர். மக்களின் நலனிலும் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை கொள்பவர். இவர், நமது பாரம்பரியத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தொடர்ந்து எழுதிவருகிறார். படித்து நாம் பயன்பெறுவோம்.

Advertisement
/body>