அதிமுகவைச் சேர்ந்த திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக அவரது கணவர் வாசுவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளவர் சத்தியபாமா (45). இவருக்கும் இவரது கணவர் வாசுவிற்கு கடந்த 1990இல் திருமணம் நடந்தது. இதற்கிடையில், கணவர் வாசுவுக்கும், சத்தியபாமாவிற்கும் கடந்த பல ஆண்டுகளாகவே மனக்கசப்பு இருந்து வருகிறது. கோபிசெட்ட்டிப் பாளையத்தின் நகராட்சி தலைவராக சத்தியபாமா பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கணவர் வாசுவை உதாசீனப்படுத்த தொடங்கியுள்ளார்.
மேலும், கணவர் வாசுவுக்கு தெரியாமல் பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளார். அதேபோல மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது, சத்தியபாமாவை வெற்றிபெற வைப்பதற்காக வாசு பலரிடம் பணம் பெற்றுள்ளார். தவிர, விவசாய நிலங்களை அடமானம் வைத்து ரூ.2 கோடி கடன் பெற்றுள்ளார். இதனிடையில் 2016ம் ஆண்டு, சத்தியபாமாவுக்கு, வாசு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனால், இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் வசிக்கும் சத்தியபாமாவை கத்தியால் குத்தி கொல்ல முயற்சித்ததாக அவரது கணவர் வாசு கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.