உழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை... நமது பாரம்பரியம்! - பகுதி 1

Advertisement

பாரம்பரியம் என்பதற்கு சரியான அர்த்தம் என்னவென்று பார்த்தால் நமது நம்பிக்கைகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் வழிவழியாய் வாங்கி வழங்குவது என்று பொருள்கொள்ளலாம்.

Save Our Tradition

எவை நமது நம்பிக்கைகள்? எவை நமது பழக்க வழக்கங்கள், இந்த கேள்விகளுக்கெல்லாம் ஓரிரு வார்த்தைகளில் யாராலும் பதிலளிக்க முடியாது. ஏனெனில், இதற்கான பதில் வார்த்தைகளைத் தாண்டி நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. நமது வாழ்வில், பல தலைமுறைகளாக கடந்துவந்தப் பாதையைத் திரும்பிப்பார்த்தால், ஒருவேளை அதற்கான பதில் ஆங்காங்கே ஒளிந்திருக்கலாம். ஆனால் அந்தப் பாதையில் தெரியும் மைல் கற்கள்தான் எவை?

நமது உணவு, உடை விளையாட்டு, வழிபாடு, என எத்தனையோ இருந்தாலும், தொழில் அவை எல்லாவற்றையும் முந்தி, இன்னும் சொல்லப்போனால் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ளது. எந்தவிதமான தொழில் நமது பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தது எனக் கேட்டால், இதில் யாருக்கும் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆம், விவசாயம்தான் அது.

விவசாயத்தில் இருந்துதான் உணவும், உடையும் கிடைத்தன. அதைச் சார்ந்துதான் நமது விளையாட்டும் (ஜல்லிக்கட்டு), வழிபாடும் (பொங்கல்) வளர்ந்தன. நெசவு, வாணிபம், வைத்தியம் என்று எவ்வளவோ தொழில்கள் இருந்தாலும் வான்புகழ் வள்ளுவர், உழவை மட்டுமே தேர்ந்தெடுத்து எழுதினார். ஏன்?

“சுழன்றும் ஏர்பின்னது உலகம், அதனால்
உழந்தும் உழவே தலை”

உலகம் பல தொழில்களைச் செய்து சுழன்றாலும், ஏர்த் தொழிலின் பின்தான் நிற்கின்றது. அதனால், எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. மற்றும் சொன்னார்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.”

இவை எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்..!

farming

ஏன் விவசாயத்திற்கு மட்டும் அப்படியொரு முக்கியத்துவம்? ஏன் உழவுக்கு மட்டும் அப்படியொரு உன்னத இடம்? காரணம், மனிதனின் ஆதி தொழில் மற்றும் ஆதார சுருதி அதுதான். இயற்கையோடு இயைந்து ஏற்படுத்திக்கொண்ட ஓர் நம்பகம்தான் உழவு. அந்த பந்தம்தான் அவனை காலாகாலத்திற்கும் பசியாற்றி வந்ததோடு மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் வைத்திருந்தது.

உண்மையில் சொல்லப்போனால், உழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை. அதனால்தான் தமிழன் நிலத்தைக்கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என மலை, காடு, வயல், கடல் என பெரும்பாலும் இயற்கை சார்ந்தே வகைப்படுத்தினான். அந்த உழவுசார்ந்து அவன் பெருக்கிக்கொண்ட உறவு முறைகள்தான் எத்தனை?

உணவு - அவன் வளர்த்தெடுத்த தாவரங்கள் அவன் வயிற்றுத் தேவையைப் பூர்த்திசெய்தன.
உடை - பருத்திபோன்ற பயிர்வகைகள் அவனது உடல் தேவையைப் பூர்த்தி செய்தன.
மண், மரம் - அவனது உறைவிடத்திற்கு உதவின.

Jallikattu

மாடு - அவனது விவசாயத்திற்குப் பயன்பட்டது. விளையாட்டில் கூடிநின்றது. முக்கியமாக அவனது அன்றைய விவசாயத் தொழில் தற்சார்பு நிலையில் இருந்தது. எதற்காகவும் உழவன் பிறரிடம் கையேந்தாமல் கௌரவமாக வாழ்ந்தான்.

விதை - அவனிடம் இருத்தது.
எரு - அவனது மாடு கொடுத்தது.
நீர் - மழை பொய்க்கவில்லை.
ஆட்கள் - அவனது குடும்பமே அவனுக்கு உதவியது.

ஆனால் இன்று?

விதைக்கும், உரத்திற்கும், நீருக்கும், ஆளுக்கும் அவன் வெளியே கையேந்தும் நிலை உள்ளது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் நாம் நமது பாரம்பரியத்தை மறந்ததே. முக்கியமாக நமது விவசாயத்தை மறந்ததே. விவசாயத்திற்கு நீண்டகால நோக்கில் எது நல்லது என பலரும் யோசிக்கவில்லை. எல்லாமே குறுகிய பார்வை கோணத்தில், வெறும் லாப நோக்கில், விளைச்சலை குறிவைத்து இருந்தனவே ஒழிய நீண்டகால, நிலைத்த வேளாண்மை பற்றி பலரும் சீர் தூக்கிச் சிந்திக்கவில்லை. அதன் விளைவைத்தான் இப்போது நாம் அறுவடை செய்துவருகிறோம்.

இதற்குத் தீர்வுதான் என்ன? எல்லோரும் பாரம்பரிய, வளமையான இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்பவேண்டும். அது ஒன்றுதான் இதற்குத் தீர்வா....?

தொடர்ந்து பார்ப்போம்.....

இந்தத் தொடரின் அத்தியாயங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்,

உணவே மருந்து... நமது பாரம்பரியம்! - பகுதி 2

“மண் பயனுற வேண்டும்” - நமது பாரம்பரியம் பகுதி - 3

“கேடில் விழுச்செல்வம்...” மாடு! - நமது பாரம்பரியம் பகுதி - 4

மரம்... பூமியின் நுரையீரல் - நமது பாரம்பரியம் பகுதி 5

நீரின்றி அமையாது உலகு... நமது பாரம்பரியம் - பாகம் 6

பகுத்துண்டு பல்லுயிர் போற்றல்... நமது பாரம்பரியம் - பாகம் 7

.............. - முனைவர் நா.லோகானந்தன்

முனைவர் நா.லோகானந்தன் கர்நாடக மாநிலத்தின் தும்கூரிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவராகப் பணியாற்றி வருபவர். “இயற்கை வேளாண்மையின் சமுதாய மற்றும் சூழலியல் சார்ந்த தாக்கம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர். மக்களின் நலனிலும் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை கொள்பவர்.

அவரிடம் உங்களுக்குப் பிடித்தவேலைகள் எவையென்று கேட்டால், “மண்ணையும், மரத்தையும், மாட்டையும் நேசித்தல்” என்றும் “மற்ற நேரத்தில் பயனுள்ள பல புத்தகங்களை வாசித்தல்..” என்றும் சிரித்த முகத்துடன் பதிலளிக்கிறார். உடலளவிலும் மனதளவிலும் இன்று நாம் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் நமது பாரம்பரியத்தை நம் காலத்தோடு இணைத்து வாழாமல் போனதே எனக் கருதுபவர். அந்தவகையில் நமது பாரம்பரியத்தை பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தொடர்ந்து எழுத இருக்கிறார். படித்து நாம் பயன்பெறுவோம்.

Advertisement
/body>