தூத்துக்குடி அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் பறிமுதல் - 5 பேர் கைது.

by Balaji, Sep 27, 2020, 19:00 PM IST

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜப்பான் நாட்டின் ஜே.வி.சி. என்ற நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்திடம் இரிடியம் என்ற தனிமத்தை வர்த்தக ரீதியாக வாங்கி வருகிறது.கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்திற்காக மும்பையில் இருந்து ஜப்பானுக்கு இரிடியம் பெட்டிகளை அனுப்பும் பொழுது அதில் 10 பெட்டிகள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் மும்பை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது
திருடு போன இரிடியம் பெட்டிகளில் ஒவ்வொன்றிலும் தலா 6 இரிடியம் குழாய்கள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும் .

இந்த 10 இரிடியம் பெட்டிகளில் 3 பெட்டிகள் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு கிடைத்துள்ளது.கள்ளச்சந்தையில் இரிடியத்திற்கு விலை மிக மிக அதிகம் என்பதால் அதை விற்கும் பொருட்டு அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த தனது நண்பரான வைத்திலிங்கத்திடம் ஒரு இரிடியம் பெட்டியை கொடுத்துள்ளார்.அவர் அவருடைய நண்பரான முத்துராமலிங்கத்துடன் அதை எடுத்துக் கொண்டு ஒரு காரில் தூத்துக்குடி வந்து புதியம்புத்தூர் அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இதனை அறிந்த தூத்துக்குடியை சேர்ந்த சிலர் இரிடியத்தை வாங்குவதற்காக அவர்களை அணுகியுள்ளனர்.இந்த டீலிங் குறித்த தகவல் புதியம்புத்தூர் போலீசுக்கு கிடைத்த தன் பேரில் அங்கு சென்ற போலீசார் இரிடியம் வைத்திரு ந்த வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம், உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 6 இரிடியம் குழாய்கள் அடங்கிய பெட்டி மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

இந்த குப்பிகளில் 144 மில்லி கிராம் இரிடியம் இருந்துள்ளது. இதை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.கடத்தல் குறித்து வைத்தியலிங்கத்திடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் சுவாமிநாதனுக்கு கிடைத்த 3 இரிடியம் பெட்டிகளில் ஒன்று திருச்சியிலும், மற்றொன்று நெய்வேலியிலும், மற்றொன்று தன்னிடமும் கொடுக்கப்பட்டதாக சொல்லியுள்ளார்.இதைத்தொடர்ந்து சுவாமிநாதன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்ய தனிப்படை போலீசார் திருச்சி மற்றும் நெய்வேலிக்கு சென்றுள்ளனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Tamilnadu News

அதிகம் படித்தவை