சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மாவட்டங்களில் புதிதாக நூற்றுக்கணக்கானோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் நோய் பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகப் புதிதாக நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
மாநில அரசு நேற்று (செப்.27) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5791 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 80,808 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இதில் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5706 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 25,154 பேர் குணம் அடைந்துள்ளனர்.
நோய்ப் பாதிப்பால் நேற்று 80 பேர் பலியானார்கள். இவர்களில் 3 பேரைத் தவிர மற்ற 77 பேருக்கும் ஏற்கனவே வேறு நோய்ப் பாதிப்புகள் இருந்தன. அதன் காரணமாகவே அவர்களுக்குச் சிகிச்சை பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இது வரை 9313 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் நேற்று புதிதாக 1280 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 191 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 63,423 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 296 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 202 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 34,578 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 31,652 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் 596 பேருக்கும், சேலத்தில் 378 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும், திருப்பூரில் 282 பேருக்கும், கடலூரில் 256 பேருக்கும், நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 173 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 161 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது.