அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை அதிமுகவில் நீடித்து வரும் நிலையில் முதலில் வழிகாட்டும் குழுவை அமைக்கவும் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில் நாளை ஏழாம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்ற தகவல் வலம் வந்தது. அது ஊர்ஜிதப்படுத்த படாவிட்டாலும் கூட அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலாலும் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையே நிலவும் பனிப்போர் உச்சக் கட்டத்தை அடைந்தது இருவரும் தத்தம் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பிரச்சனைக்குச் சுமுகத் தீர்வு காண வழிகாட்டு குழு அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
இதன்படி 11 பேர் கொண்ட இந்த குழுவில் ஈ.பி.எஸ்.சார்பில் 6 பேரும் ஓ.பி.எஸ் சார்பில் 5 பேரும் இடம் பெற உள்ளதாகச் சொல்லப்படுகிறது.ஈ.பி.எஸ்.தரப்பில் ஜெயகுமார், சி.வி .சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா, தங்கமணி, வேலுமணி ஆகியோரும் ஓ.பி.எஸ் தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே சி டி பிரபாகரன் , சுப்புரத்தினம், சண்முகநாதன், தேனி கணேசன் அல்லது விருதுநகர் பாலகங்கா ஆகியோரில் 5 பேர் இடம் பெறவுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுகிறது இல்லையோ அதிமுகவின் பொதுக்குழு தேதி நாளை நிச்சயம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு, ஒரே ஒருங்கிணைப்பாளராக ஒபிஎஸ் அறிவிக்கப்பட இருக்கிறார் எனவும் கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.