அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி.. ஓ.பி.எஸ். அறிவித்தார்.. வழிகாட்டுதல் குழுவும் அமைப்பு.

Admk C.M. candidate Edappadi palanisamy, OPS announced.

by எஸ். எம். கணபதி, Oct 7, 2020, 13:07 PM IST

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளா். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த 10 நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த பரபரப்பான சூழலில் கடந்த செப்.28ம் தேதி கட்சியின் செயற்குழு கூடியது.
கூட்டத்தில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தன்னையே அறிவிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து பேசினார். இருதரப்பிலும் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், அக்.7ம் தேதியன்று முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று நிருபர்களிடம் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.


இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு சென்று 2 நாட்களாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு எந்த முடிவும் எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.இந்த சூழ்நிலையில், இன்று காலை 9 மணி முதல் அதிமுக தலைமை அலுவலகம் களைகட்டியது. வழக்கம்போல், மேளதாளம் முழங்க சமூக இடைவெளி, முகக் கவசம் என எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் நூற்றுக்கணக்கானோர் கூடினர். காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர். இருவருக்கும் மலர்தூவி தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், முதல்வருக்கு கூட வழிவிடாமல் நெருக்கியடித்து கொண்டு உள்ளே சென்றனர்.
அங்கு முதல்வரும், துணை முதல்வரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எழுந்து, வழிகாட்டுதல் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் வேட்பாளரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவிப்பார்கள்என்றார்.


தொடர்ந்து, வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் வருமாறு:
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவிசண்முகம், காமராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், முன்னாள் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.
முதல்வர் இந்த உறுப்பினர்களை அறிவித்ததும், ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் ஒருவொருக்கொருவர் சால்வை அணிவித்து, மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து கொண்டார். இதன்பின், கட்சி நிர்வாகிகள், அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சேர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

You'r reading அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி.. ஓ.பி.எஸ். அறிவித்தார்.. வழிகாட்டுதல் குழுவும் அமைப்பு. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை