விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த மாதம் 23ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின். பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்கு பின் இருவருமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நேற்றிரவு(அக்.6) விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை மோசமானதாக வதந்திகள் பரவின. இதை தேமுதிக தலைமை அலுவலகம் மறுத்தது. தொடர்ந்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர், விஜயகாந்த்துக்கு கோவிட்19 சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சீரான திட்டமிட்ட தொடர் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கதிரியக்க மதிப்பீடு செய்ததில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.