ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் போராட்டம் நடத்த கூடாது உச்ச நீதிமன்றம்.

Public places cant be occupied indefinitly, SC on shaheen bagh

by Nishanth, Oct 7, 2020, 13:54 PM IST

ஷஹீன் பாக் போல மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடும் போராட்டம் வெடித்தது. டெல்லி ஷஹீன் பாக்கில் வாரக்கணக்கில் இந்த போராட்டம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.


இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து போலீசார் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையே முழு லாக்டவுனும் அறிவிக்கப்பட்டதால் அந்த போராட்டம் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் பொது இடத்தை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட ஷஹீன் பாக் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுஇடங்களில் போராட்டங்கள் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று அளித்துள்ள உத்தரவில் கூறி இருப்பது: பொது இடங்களையும், சாலைகளையும் ஆக்கிரமித்து, நாட்டின் குடிமகனுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத வகையில் சிரமத்தை ஏற்படுத்தும் போராட்டங்கள் நடத்த கூடாது. நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. இந்திய நாட்டின் சட்டம் அந்த உரிமையை எல்லா குடிமக்களுக்கும் வழங்கியுள்ளது.


ஆனால் அதன்மூலம் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது போல தற்போது போராட்டம் நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. பொது இடங்களை ஆக்கிரமித்து பல நாட்கள் போராட்டம் நடத்துவதற்கு எதிராக போலீசும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்ப யுகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் தற்போது சமூக இணையதளங்கள் நமது சமூகத்திற்கு பெரும்பாலும் தீங்குகளைத் தான் விளைவிக்கின்றன. அப்படி ஒரு சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது. சாதாரண ஒரு எதிர்ப்பு போராட்டமாக தொடங்கிய ஷஹீன் பாக் போராட்டம் பின்னர் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியதற்கு சமூக இணையதளங்களும் ஒரு காரணமாகும். அந்த போராட்டத்தால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசியில் கொள்ளைநோய் பரவிய காரணத்தால் தான் அந்த போராட்டத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் தான் போராட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை