அதிமுக எம்எல்ஏ கடத்தி கட்டாயத் திருமணமா? மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு.

by எஸ். எம். கணபதி, Oct 8, 2020, 12:34 PM IST

அதிமுக எம்.எல்.ஏ. கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறப்படும் கல்லூரி மாணவி சவுந்தர்யாவையும், அவரது தந்தை அர்ச்சகர் சுவாமிநாதனையும் நாளை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு(34), கடந்த காலத்தில் டிடிவி தினகரன் அணிக்கு போய் விட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே வந்து விட்டார்.தியாகதுருகத்தில் இவர் வசித்து வருகிறார். அதே ஊரில் சேலம் சாலையில் சுவாமிநாதன் என்ற கோயில் அர்ச்சகர் வசித்து வருகிறார். அவரது மகள் சவுந்தர்யா(19), திருச்செங்கோட்டில் உள்ள கலைக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சவுந்தர்யாவும், பிரபுவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் தியாகதுருகத்தில் உள்ள பிரபுவின் வீட்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணப் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிரபு, பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் தனது வீட்டு வாயிலில் தீக்குளிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனது மகள் சவுந்தர்யாவை அதிமுக எம்.எல்.ஏ. பிரபு கடத்திச் சென்று, கட்டாயத் திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டார்.இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பிரபுவும், சவுந்தர்யாவும் தாங்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக பேசி, வீடியோக்களை வெளியிட்டனர். இருவர் பேசிய வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில், சுவாமிநாதன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வருகிறார். சவுந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஏதேதோ பேசி ஏமாற்றி, கடத்திச் சென்றுள்ளார். பிரபு மீது போலீசில் புகார் கொடுத்த பிறகும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை எம்எல்ஏவின் ஆட்கள் மிரட்டுகிறார்கள். எனவே, எனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் சுவாமிநாதன் கூறியுள்ளார். இம்மனுவை நீதிபதி சுந்தரேஷ் அமர்வு விசாரணை நடத்தியது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காதல் திருமணம் செய்த மாணவி சவுந்தர்யாவவையும், அவரது தந்தை சுவாமிநாதனையும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

Get your business listed on our directory >>More Tamilnadu News