வரப்போகும் சட்டசபை தேர்தலில் ஆட்சியை தொடர வைக்க வேண்டும் என்ற முனைப்போடு அதிமுக தீவிரமாக இருக்கிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை என்பதையே பிரச்சார ஆயுதமாக எடுத்துக்கொண்டு அடுத்த ஆட்சி நமதே என்ற கணக்கில் திமுகவினரும் இப்போதே பம்பரமாக தேர்தல் தொடர்பான வேலைகளை திட்டமிட்டு வருகின்றனர்.
ஆளும் கட்சியான அதிமுகவை பொருத்தவரை மத்திய ஆளும் கட்சியான பாஜக உடன் இணக்கமாக செல்லவே விரும்புகிறது. வரப்போகும் சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி என்று பாஜக மாநில தலைவர் முருகன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் அவர் அடுத்து தமிழகத்தில் அமையப்போகும் ஆட்சியில் எங்களது பங்கு பிரதானமாக இருக்கும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கடைசி நேரத்தில் கூட கூட்டணி மாறலாம் பாஜக திமுக கூட்டணி கூட மலர வாய்ப்பிருக்கிறது என்ற ரீதியில் சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
இது மற்ற கட்சிகளைப் பொருத்தவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றபோதிலும் பா. ஜ.காவிலேயே இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக பொன்ராதாகிருஷ்ணன் தன்னிச்சையாக இப்படி தெரிவித்தது ஏன்? என்று பாஜக தொடர்பான முகநூல் பக்கங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொன் ராதாகிருஷ்ணன் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் என்றாலும் தற்போது அவர் சாதாரண பாஜக தொண்டர் தான். அவருக்கு எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. அப்படி இருக்க கூட்டணி பற்றி கருத்து சொல்ல அவருக்கு உரிமை இல்லை. இதுபோன்ற கருத்துக்களை சொல்வதற்கு மாநில தலைவருக்கு மட்டுமே உரிமை உள்ளது என்ற ரீதியில் தொண்டர்கள் அவரை சாடி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க பாஜகவுடன் திமுக கூட்டணி சேர வாய்ப்பே இல்லை என்று திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் திமுக கூட்டணியில் யார் இடம் பெற வேண்டும் என்பதை தலைவர் மு க ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உண்டு. அதே சமயம் பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. எனவே திமுக கூட்டணியில் பாஜக வுக்கு இடமில்லை. அதிமுக-பாஜக கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டு அதன் காரணமாக கூட பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி ஒரு கருத்தை தெரிவித்து இருக்கலாம் என்றார்.