சென்னை - மதுரை தேஜஸ் ரயில் நேரம் மாற்றம்.

by Balaji, Oct 11, 2020, 17:43 PM IST

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும்.

இந்த ரயில் காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படுவதால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பயணிகள் இந்த ரயிலை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த ரயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். பயணிகளின் இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து புறப்படும் நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் அக் 13 முதல் வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.50 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில் திருச்சியில் இருந்து முற்பகல் 10.35 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து முற்பகல் 11.55 மணிக்கும் புறப்படும்படி நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Get your business listed on our directory >>More Tamilnadu News