நீலகிரி மாவட்ட ஆட்சியர் அனுப்பியது போன்று மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு மோசடி மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.ஆன்லைன் மோசடிகள் பெருகிவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பெயரைப் பயன்படுத்தி உயர் அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் இன்னோசென்ட் திவ்யா. அவர் அனுப்பியது போன்று மின்னஞ்சல் ஒன்று மாவட்ட உயர் அதிகாரி ஒருவருக்குச் சென்றுள்ளது. அதில் இணைய அங்காடிகளின் வெகுமதி அட்டைகளை (ஆன்லைன் கிஃப்ட் கார்டு) வாங்கும்படி கோரப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் ரூ.5,000/- மதிப்பிலான நான்கு கூப்பன்களை வாங்கும்படி மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.
சந்தேகமடைந்த அதிகாரி, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததின் மூலம் மோசடி முயற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பிய ஆசாமியைத் தேடி வருவதாகக் கூறியுள்ள கண்காணிப்பாளர் சசிமோகன், அறிமுகம் இல்லாத மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் ஹைபர்லிங்குகள் மற்றும் க்யூஆர் கோடுகளைத் திறக்கவேண்டாம் எனவும், மொபைல் போன்களில் மோசடி செயலிகளைத் தரவிறக்கம் செய்ய வைத்து அதன் மூலம் தொலைவிலிருந்தே அவற்றை இயக்க முடியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.