மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குத் தடை நீடித்து வருவதால் அருவிகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.குற்றாலத்திற்குக் கேரள மாநிலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இங்குப் பருவமழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும். கேரளாவில் ஜூனில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும். பின்னர் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கினால் டிசம்பர் வரை பெய்யும். பெரும்பாலும் குற்றாலத்தில் செப்டம்பர் வரை தண்ணீர் கொட்டும். கேரளாவில் பருவமழை தீவிரமாக உள்ள வருடங்களில் தொடர்ந்து 5 மாதங்களுக்கு மேல் குற்றாலத்தில் சீசன் களைகட்டி இருக்கும்.
மிக அபூர்வமாக மட்டுமே குற்றாலத்தில் சீசன் டல் அடிக்கும். இவ்வருடமும் வழக்கம்போல ஜூனிலேயே சீசன் தொடங்கி விட்டது. ஆனால் அதை அனுபவிக்கத் தான் யாருக்கும் கொடுத்து வைக்கவில்லை. குற்றாலம் என்பது தென்மாவட்ட மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட அம்சமாகும். சீசன் தொடங்கி விட்டால் தென்மாவட்ட மக்கள் பெரும்பாலும் வார விடுமுறை நாட்களில் குற்றாலத்தில் தான் முகாமிடுவார்கள்.
ஆனால் இந்த வருடம் வந்த கொள்ளை நோயான கொரோனா தென்மாவட்ட மக்களின் குற்றால கனவுகளையும் பறித்து விட்டது.
ஊரடங்கு சட்டத்தில் ஏராளமான நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட போதிலும் குற்றாலத்தில் குளிப்பதற்குத் தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. எந்தக் காரணம் கொண்டும் குற்றாலத்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என்று தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜூனில் தொடங்கிய சீசன் அக்டோபர் பாதிக்கு மேலான பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் பழைய குற்றாலம், பிரதான அருவி, ஐந்தருவி புலியருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆனால் குளிக்க யாருமே இல்லாமல் அனைத்து அருவிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.