800 பட சர்ச்சை நீண்டுகொண்டே இருக்கிறது. படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முத்தையா முரளிதரன். அதில், ``இதுநாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகள் கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையனாஅலும் சரி தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்.
என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் எனபலராலும் உருவாக்கப்பட்டன என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துத்தான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.
இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலைய தமிழர்கள்தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
என் ஏழு வயதில் எனது தந்தை வெடிப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர்.
வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை அதன் மத்தியிலேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் 800." என்று அதில் கூறியுள்ளார்.