வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி ரூ.250 கோடி சுருட்டிய அடுத்த நகைக்கடை!

கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது ரூ. 824 கோடி அளவிற்கு கடன் மோசடி புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது, பிரபல நகை விற்பனை நிறுவனமான நாதெள்ளா சம்பத் ஜூவல்லரியும் ரூ. 250 கோடி கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ளது.

Mar 25, 2018, 08:59 AM IST

‘கனிஷ்க்’ கோல்டு நிறுவனம் மீது ரூ. 824 கோடி அளவிற்கு கடன் மோசடி புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது, பிரபல நகை விற்பனை நிறுவனமான நாதெள்ளா சம்பத் ஜூவல்லரியும் ரூ. 250 கோடி கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 12 ஆயிரம் கோடி அளவிற்கு கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ரோடோமேக் பேனா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரியின் ரூ. 3 ஆயிரத்து 695 கோடி மதிப்பிலான வங்கி மோசடி வெளியில் வந்தது.

இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘கனிஷ்க் கோல்டு’ நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 824 மோசடி செய்தது. இந்நிலையில்தான் சென்னையின் பிரபல நகை விற்பனை நிறுவனமான நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் ரூ. 250 கோடி அளவிற்கு மோசடி புகாரில் சிக்கியுள்ளது.

நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி நிறுவனமும் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தவறான நிதி கணக்குகளை காட்டி ஸ்டேட் வங்கியில் ரூ. 250 கோடி வரை கடன் பெற்றுள்ளது. கடந்த 2017 டிசம்பர் 22-ஆம் தேதி வங்கியின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. எனவே மோசடி தொடர்பாக சி.பி.ஐ. தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தற்போது புகார் அளித்துள்ளது.

ஏற்கெனவே இதன் துணை நிறுவனமான நாதெள்ளா சம்பத் செட்டி நகைக் கடை பொதுமக்களிடம் இருந்து தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடுகளை பெற்றது. கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் திடீரென்று இந்த நிறுவனம் நகை சீட்டு கட்டியவர்களுக்கு நகை தராமலும், பணத்தை திருப்பி தராமலும் சென்னையில் உள்ள அதன் அனைத்து கிளை கடைகளையும் மூடிவிட்டது.

வாடிக்கையாளர்களுக்கு பணத்தை தர இயலவில்லை என்று மூடப்பட்ட நகை கடைகளில் நோட்டீஸை மட்டும் அந்த நிறுவனம் ஒட்டிவிட்டுச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் நகை கடையை முற்றுகையிட்டார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் நாதெள்ளா சம்பத் செட்டி நிறுவனம் பொதுமக்களிடம் மாதாந்திர தவணை முறையில் பல்வேறு சீட்டு குரூப்கள் மூலம் நகை தருவதாக பணம் வசூலில் ஈடுபட்டதும், மொத்தம் 21 ஆயிரம் பேரிடம் ரூ. 75 கோடி வசூலித்ததும் தெரியவந்தது.

இதில் 1,000 வாடிக்கையாளர்கள் வரை போலீசில் புகார் செய்துள்ளனர். நகை கடை அதிபர்கள் ரங்கநாத குப்தா மற்றும் அவரது மகன்கள் பிரபன்னகுமார், பிரசன்னகுமார், உறவினர் கோடா சுரேஷ் மற்றும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி, பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 250 கோடியை சுருட்டியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி ரூ.250 கோடி சுருட்டிய அடுத்த நகைக்கடை! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை