கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த ஜீவித்குமார் என்ற மாணவர் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். இதற்கிடையே, இந்த முறை நீட் தேர்வு வென்றவர்களில் தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்று தேர்வு எழுதிய 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக அரசின் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மொத்தம் 6,692 பேர் நீட் தேர்வை எதிர் கொண்ட நிலையில், 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வாசுகி என்ற அரசுப் பள்ளி மாணவி 720க்கு 580 மதிப்பெண்கள் பெற்று இவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் காஞ்சிபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் 720க்கு - 552 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இதற்கிடையே, நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 400-500 மதிப்பெண்களுக்குள் 15 பேரும், 300-400 மதிப்பெண்களுக்குள் 70 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 300-க்கும் அதிகமான மதிப்பெண்களை 32 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 70 பேர் தேர்ச்சியடைந்துள்ளது முன்னேற்ற பாதையை காண்பிக்கிறது.