லஞ்ச புகாரில் சிக்கிய, வேலுார் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், 650 ஏக்கர் நிலங்களை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்தது.
வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பவர் பன்னீர்செல்வம், இவர் மீது அடுக்கடுக்காக வந்த புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரது வீடு மற்றும் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத, 3.25 கோடி ரூபாய், 3.6 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 90 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் , மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம், பன்னீர்செல்வத்தை 'சஸ்பெண்ட்' செய்தார். சஸ்பெண்ட் செய்யப் பட்டதால், பன்னீர்செல்வம் வீட்டிலேயே இருந்தார். அவரை யாராவது சந்திக்கின்றனரா என, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.பன்னீர்செல்வம் வெவ்வேறு பெயர்களில், 20 மொபைல் போன்கள் வைத்துள்ளார்.
போலீசார் அவற்றையும் கைப்பற்றி, அதில் தொடர்பு கொண்டவர்கள் யார் யார் என்பது குறித்து, விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பன்னீர்செல்வத்திடம் கைப்பற்றிய, சொத்து ஆவணங்களின் அடிப்படையில் அவர் வாங்கி குவித்த சொத்துக்களின் மதிப்பை, பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.வேலுார், ஏலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மட்டும் பன்னீர்செல்வம் 650 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அவரது வங்கி பணப் பரிவர்த்தனை குறித்தும், விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது அவரது வீட்டிலிருந்து, 'டைரி' ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். அதில், அவர் மாதந்தோறும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விபரம், அவர் எந்தெந்த நிறுவனங்களில் இருந்து, எவ்வளவு லஞ்சம் வாங்கினார் மற்றும் தொடர்பில் உள்ள அரசியல் பிரமுகர்கள் குறித்த விபரங்கள் உள்ளன.இதனால், அவரிடம் லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர் .
மேலும், பன்னீர்செல்வத்துடன் பணியாற்றி வந்த, 21 நபர்கள் மற்றும் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடக்கிறது. அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப் படுகிறது. கடந்த, 13ஆம் தேதி காட்பாடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கலந்துகொண்ட ஏழு மாவட்ட அதிகாரிகளிடமும் ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.