லஞ்ச வேட்டை 100 கோடி : வேலூர் அதிகாரி ஜாமீன் மனு தள்ளுபடி

லஞ்சப் புகாரில் சிக்கிய வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பன்னீர்செல்வத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

by Balaji, Nov 6, 2020, 11:22 AM IST

வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் ( 51) என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 25 லட்ச ரூபாய் ரொக்கம் 3.6 கிலோ தங்கம் 6.5 கிலோ வெள்ளிி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்து குறித்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பன்னீர்செல்வம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பன்னீர்செல்வம் அவரது மனைவி பத்மா மற்றும் குடும்பத்தினர் பெயரில் உள்ள 21 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர். அவரது மனைவி பத்மா பெயரில் ராணிப்பேட்டை பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள லாக்கரிலிருந்து அரை கிலோ தங்கக் காசுகளையும் சில சொத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

அவர் வாங்கி குவித்த சொத்துக்களின் விவரங்களைச் சேகரித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரது வீட்டில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 60க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்களைப் பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டதில் சுமார் 100 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது வங்கி பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பன்னீர்செல்வம் வேலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த முதன்மை குற்றவியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் சிக்கியிருப்பதால் பன்னீர்செல்வத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.பன்னீர் செல்வத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் கைதாகலாம் என்று தெரிகிறது.

You'r reading லஞ்ச வேட்டை 100 கோடி : வேலூர் அதிகாரி ஜாமீன் மனு தள்ளுபடி Originally posted on The Subeditor Tamil

More Vellore News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை