விலகச் சொன்ன முரளிதரன்.. நன்றி சொன்ன விஜய் சேதுபதி!

muralidharan asking vijay sethupathi to dont act 800 movie

by Sasitharan, Oct 19, 2020, 17:45 PM IST

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை எடுத்துச் சொல்லும் `800' படத்தின் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. தினமும் ஒருவர் எதிர்ப்பு என்கிற ரீதியில் இதில் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கிடையே, ``முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ஒரு நல்ல கதை என்பதால் அதில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை, இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் படம் பதில் சொல்லும்" இலங்கை ஊடகத்திடம் தனது நிலைப்பாடு குறித்து எடுத்து கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதற்கிடையே, முரளிதரன் ஒரு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு இருக்கிறார். அதில், ``எனது சுயசரிதை படமான 800 திரைபடத்தை சுற்றி, தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

என் மீதான தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சில தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒருபோதும்‌ நான்‌ சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்காலத் தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு உத்வேகத்தையும்‌ மன உறுதியையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்கச் சம்மதித்தேன்‌. அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட்டுள்ளன .

நிச்சயமாக இந்தத் தடைகளையும்‌ கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌, அவர்கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும்,‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்,‌ தமிழ்‌த் திரைப்படக் கலைஞர்களுக்கும்,‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர்களுக்கும்,‌ பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌" என்று கூறியிருந்தார். இந்த அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் விஜய் சேதுபதி, `நன்றி வணக்கம்' என்று முடித்துக்கொண்டார். எனினும் படத்தில் இருந்து விலகினாரா இல்லையா என்பது குறித்து தெளிவாக கூறவில்லை.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை