அருப்புக்கோட்டையில் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவிற்காக பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஊரடங்கு காலத்தில் கடை முன்பு சமூக இடைவெளியின்றி மக்களை திரட்டிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஜாகிர் உசேன் என்பவர் புதிய பிரியாணி கடை ஒன்றை திறந்தார். இதன் திறப்பு விழாவிற்காக முதல் நாள் காலை 11 மணி முதல் 1 மணி வரை ஒரு பிளேட் பிரியாணி பத்து ரூபாய்க்கு விற்கப்படும் என்று விளம்பரம் செய்திருந்தார். இதையடுத்து அவரது கடை முன்பு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சமூக இடைவெளி இல்லாமலும் முக கவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்ததால் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி போலீசார் விற்பனையை தடை செய்தனர்.
இந்த விற்பனைக்காக சுமார் 2 ஆயிரத்து500 பாக்கெட் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இருப்பினும், 500 பாக்கெட்டுகளை மட்டுமே விற்ற நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் விற்பனை நிறுத்தப்பட்டது.
மக்கள் கூடுவதை தடுக்க இரண்டு போலீஸ்காரர்களும் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டனர். கடை மண் கூடியவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், போலீசார் மீதமுள்ள பிரியாணி பாக்கெட்டுகளை ஏழைகள் சிலருக்கு வழங்க ஏற்பாடு செய்தார். ஜாகீர்உசேன் மீது தொற்று நோய்கள் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இதுபோன்ற முயற்சிக்க வேண்டாம் என்று போலீசார் அவரை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்