கார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?

how comes cardiac arrest and how to overcome from cardiac arrest

by SAM ASIR, Oct 20, 2020, 14:00 PM IST

இதயத்திற்கு இரத்தம் செல்வது திடீரென நின்றுபோகும் நிலை இதய செயலிழப்பு எனப்படுகிறது. இதனால் உடலின் சமநிலை சீர்குலைந்து இதய செயல்பாடு, சுவாசம் மற்றும் சுயநினைவு அனைத்தும் பாதிப்புக்குள்ளாகிறது. உடலின் செயல்பாட்டை இது பாதித்தாலும், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படவில்லையென்றால் உயிருக்கு ஆபத்தாக முடியும். இதயம் செயல்படுவதை நிறுத்தும்போது, இதயத்தின் வழியாக இரத்தம் செல்லக்கூடிய மூளைக்கும், நுரையீரலுக்கும் ஏனைய முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செல்வது பாதிக்கப்படுகிறது. ஆகவே பாதிப்புற்றவர் சுயநினைவிழக்கக்கூடும்; நாடித்துடிப்பிலும் பாதிப்பு தெரியக்கூடும்.

கவனிக்கவேண்டிய அறிகுறிகள்

ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, யாருக்கு வேண்டுமானாலும் இதய செயலிழப்பு நேரலாம் என்பதே அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை. ஆபத்தான அறிகுறிகள் இல்லாமலே இதய செயலிழப்பு நேரக்கூடும் என்றாலும் மூச்சுத் திணறல், நாடித்துடிப்பை உணர இயலாமை, நெஞ்சை சுற்றியுள்ள பகுதியில் வித்தியாசமான உணர்வு அல்லது வலி, திடீரென நிலைகுலைதல், அதிக இதய படபடப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு, அதிகப்படியான வியர்வை, பலவீனம் போன்ற சிறு அறிகுறிகள் ஏற்படலாம். இவற்றை அலட்சியம் செய்யக்கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும்.

இதய செயலிழப்பும் மாரடைப்பும் ஒன்றா?

இதய செயலிழப்பு, மாரடைப்பு இரண்டுமே இதயத்தின் செயல்பாட்டை பாதித்தாலும் ஒன்று மற்றொன்றாக புரிந்துகொள்ளப்படுகிறது. இரண்டும் வேறுபட்டவை. இதயத்தில் திடீரென அடைப்பு ஏற்படுவதால் அதன் செயல்பாடு நின்றுபோவதால் மாரடைப்பு நேருகிறது. இரத்தம் ஓட்டம் நின்றுபோவதால் இதய தசை திசுக்கள் உயிரிழக்கின்றன. பரம்பரை, வாழ்வியல் முறை மற்றும் உடல்நல குறைபாடுகள் மாரடைப்புக்குக் காரணமாகின்றன. மாரடைப்பும் இதய செயலிழப்பை போன்றே ஆபத்தான பாதிப்பென்றாலும் தற்போதுள்ள மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக மாரடைப்புக்கு நல்ல சிகிச்சையளிக்க முடியும். ஆகவே, உயிரிழப்பு அபாயம் குறைவு.

மாரடைப்பை போலன்றி, இரத்தத்தை இறைத்து அனுப்பும் பணி மற்றும் இதய துடிப்பு இவற்றுக்குக் காரணமான இதயத்தின் மின்னியல் அமைப்பில் (எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்) பழுது ஏற்பட்டு இதயம் முற்றிலுமாக செயலிழந்து விடுவதே 'கார்டியாக் அரஸ்ட்' என்னும் இதய செயலிழப்பாகும். இதயத்தின் வென்ட்ரிக்கிள் அறையில் ஏற்படும் பிரச்னை, சீரற்ற இதய துடிப்பு இவற்றின் மூலமாகவும் 'கார்டியாக் அரஸ்ட்' நேரிடும். மாரடைப்பும் இதய செயலிழப்பு நேரிட காரணமாகலாம். மாரடைப்பிலிருந்து மீண்டு வருவோருக்கு 'கார்டியாக் அரஸ்ட்' ஏற்பட வாய்ப்புள்ளது. பிறவியிலிருக்கும் இதய குறைபாடு, இதயம் வீங்குதல், தமனி நோய், வால்வு பிரச்னை ஆகியவையும் இதய செயலிழப்புக்கு காரணமாகலாம்.

இதய செயலிழப்புக்கான முதலுதவி

யாருக்காவது இதய செயலிழப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ அவசர உதவிக்கான எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும். மருத்துவ குழுவினர் வரும் முன்னர் சிபிஆர் (cardiopulmonary resuscitation) என்னும் முதலுதவியை செய்ய வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் உயிரிழப்பு அபாயத்தை கொண்டு வரும்.

பாதிக்கப்பட்டவரை படுக்கவைத்து அவரது மார்பை வேகமாகவும், அதிகமாகவும் அழுத்தவேண்டும். அழுத்தும்போது காற்றுக்குழல்களில் உள்ள அடைப்பு நீங்கி சுவாசிக்கமுடியும். சிபிஆர் முதலுதவி இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கிறது.

You'r reading கார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை