மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதால், தமிழகத்தில் கிராமப்புற அரசு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாக மாறி விட்டது. அரசு பயிற்சி மையங்கள் அமைத்தாலும் கூட, அரசு பள்ளி மாணவர்களால் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற முடிகிறது. நீட்தேர்வு மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு அளித்து சட்டசபையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை கவர்னருக்கு அனுப்பி, ஒரு மாதமாகியும் அவர் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறார்.
இந்நிலையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் நேற்று(அக்.20) ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, அந்த மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். மேலும், கவர்னர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படாது என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது. இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழக கவர்னருக்கு தனியாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் 7.5 சதவீத ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு: மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட முன்வர வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.