கர்நாடக முதலமைச்சரிடம் பேச மு.க.ஸ்டாலின் மற்றும் திருநாவுக்கரசருக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறோம். அவர்கள் செல்ல தயாரா?” என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிமுக அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மாட்டார்கள். ஆனால், இவர்கள் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்' என திமுக செயல் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த பொன்.இராதாகிருஷ்ணன், “தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடியின் அரசு கவனம் செலுத்துகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் பெங்களூரு சென்று கர்நாடக முதலமைச்சரிடம் பேசி சம்மதம் பெறவேண்டும். தமிழக அரசின் சார்பில் எதிர்க்கட்சி தலைவரை பெங்களூருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.
ஏன் இரட்டை வேடம் போடுகின்றனர். கர்நாடகாவுக்கு சென்று முதலமைச்சரிடம் பேச மு.க.ஸ்டாலின் மற்றும் திருநாவுக்கரசருக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறோம். அவர்கள் செல்ல தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.