பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ``ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!" என்று திடீரென கருத்து தெரிவித்து இருந்தார். ஆளுங்கட்சியை நேரடியாக விமர்சனம் செய்யும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
சட்டசபை தேர்தல் நெருக்கின்ற நிலையில் தமிழக அரசு மீதான ராமதாஸின் விமர்சனம் கவனிக்கப்படக்கூடியதாக அமைந்து வருகிறது. ஏறகனவே திமுக கூட்டணியில் இந்த முறை பாமக இணையவிருப்பதாகவும், அதற்கான வேலைகளில் திமுக முக்கிய பிரமுகர் ஒருவர் செய்து வருவதாகவும் சமீப காலமாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ராமதாஸின் இந்தக் கருத்து கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதேநேரம், எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்லாமல், வெறுமனே ஆட்சியாளர்கள் எதையும் சொல்ல மறுக்கிறார்கள், செய்யவும் மறுக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தியிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.