மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க அவகாசம் தேவை என ஆளுநர் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மசோதா தாக்கல் செய்து அதை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன் தமிழக அமைச்சர்கள் இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து இதுதொடர்பாக பேசினர். மேலும் ஒப்புதல் தரும் வரை மருத்துவ கவுன்சிலிங்கை நடத்த போவதில்லை என்று அறிவித்தனர். இதன் பின் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியது.
திடீரென இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இன்று, மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் அக்டோபர் 24ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார் ஸ்டாலின். மேலும் இது தொடர்பாக ஆளுநருக்கு கடிதமும் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு ஆளுநர் தரப்பில் இருந்து பதில் வெளியாகியிருக்கிறது. அதில், ``மசோதா தொடர்பாக அனைத்து கோணங்களிலும் ஆராய வேண்டி இருக்கிறது. ஒரு முடிவுக்கு வர, 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் வேண்டும். என்னை சந்தித்த அமைச்சர்களிடம் இதைத் தான் எடுத்து கூறினேன்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் செயலில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார் என முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும், ``நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு துரோகம் இழைத்தது திமுக காங்கிரஸ்தான். ஆனால் 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி நான் வலியுறுத்தி ஆளுநரை கேட்டுக்கொண்டேன். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு செய்வதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். அரசு பள்ளியில் படித்த நான் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தேன். ஸ்டாலினின் நீலிக் கண்ணீர் மக்கள் மனங்களில் சலனத்தை ஏற்படுத்தாது.
தமிழ்நாடு அரசுக்கு மக்கள் ஆதரவு அமோகமாகப் பெருகி வருகிறதே என்ற அச்சத்தின் காரணமாக அறிக்கை அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின். வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தங்களால்தான் எல்லாம் நடந்தது என காண்பிக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின்" எனக் கூறியுள்ளார்.