தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் திருச்சி கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி வட்டாரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்திற்குக் கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.