தமிழக அரசுப் பணிகளில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதை உணர்த்தி உள்ளது இந்த சோகமான நிகழ்வு. வயதான மூதாட்டி ஒருவர், வாரிசு சான்றிதழ் வாங்க, கிராம நிர்வாக அலுவலரை அணுக, அவர் லஞ்சம் கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ் தர முடியும் எனக் கூற, திகைத்த மூதாட்டி, லஞ்சம் கொடுக்க பணம் தேவை எனப் பிச்சையெடுத்து அதிகாரிகளின் மனசாட்சியின்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆலாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி ( 63). இவரது கணவர், மகன் ஏற்கனவே காலமான நிலையில், மருமகளும் கடந்த மாதம் இறந்து போனார். இவரது மகனுக்கு 2 பெண் குழந்தைகள் . இதனால், தனது சொத்துக்களை, பேரக்குழந்தைகளின் பெயரில் மாற்ற ஜோதி மணி முடிவு செய்தார். இதற்காக மாத்துார் கிராம நிர்வாக அலுவலரிடம் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்.
ஆனால்,லஞ்சம் கொடுக்காததால் சான்றிதழ் கிடைக்கவில்லை . கிராம நிர்வாக அலுவலரை ஜோதிமணி நேரடியாகச் சந்தித்து இதுபற்றி கேட்க 3 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கொடுத்தால் உடனடியாக தருவதாகக் கிராம நிர்வாக அலுவலர் சொல்லியிருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி மறுநாள், தனது பேரக்குழந்தைகளுடன் அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்குச் சென்றார். வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் கொடுக்க பணம் தேவை என ஒரு அட்டையில், எழுதி தாலுகா அலுவலக வாயிலின் முன்பு அமர்ந்து பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைக்கண்ட பலர், அவருக்குப் பணம் வழங்கிய நிலையில், சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்தார் தாசில்தார் மாரிமுத்து, ஜோதிமணியுடன் பேசி கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். மேலும், விஏவி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தார்.எடுத்து ஜோதிமணி போராட்டத்தை வாபஸ் பெற்றார். உறுதியளித்த அப்படியே தாசில்தார் ஜோதி மணிக்கு மறுநாள் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.