கொரோனோ ஊரடங்கால் எல்லா பணிகளும் முடங்கி இருந்தது. முடங்கிய பணிகளில் 2 மாதத்துக்கு முன்பிலிருந்தே மெதுவாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின. சினிமா படப்பிடிப்புகளும் தொடங்கின. கொரோனா தடை காலத்துக்கு முன்பு தொடங்கிய படங்களே 50 சதவீதம் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. சில படங்களின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தொற்று பயத்தில் இன்னும் தொடங்காமலே உள்ளது.
ஆனால் கொரோனாவில் பூஜை போட்டுத் தொடங்கிய படம் கொரோனா காலத்திலேயே முடிக்கப்பட்டிருப்பது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அதாவது 30 நாட்களில் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்திருக்கிறது. அதுபற்றிய விவரம்:இயக்குனர் சுந்தர் .சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் 'நாங்க ரொம்ப பிஸி'. இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார்.
பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்குக் கிச்சா ஒளிப்பதிவு செய்ய, பிரேம் கலை அமைத்தார். பென்னி எடிட்டிங் செய்கிறார். சந்தோஷ் நடனம் அமைக்க பிரதீப் தினேஷ் சண்டைக் காட்சிகள் அமைத்தார்.டீமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இக்கதையில் நகைச்சுவை மேலோங்கியிருந்தாலும் ரொமான்ஸ், ஆக்ஷன் போன்றவையும் கலந்திருக்கும்.
கொரோனா காலத்தில் திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் சூழலில் அரசின் பாதுகாப்பு வழி முறைகளோடு தொடங்கப்பட்ட முதல் படம் இதுதான். அதுமட்டுமல்ல, செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு கொரோனா காலத்திலேயே முடிக்கப்பட்ட படமும் இதுதான்.